Tuesday, January 15, 2019

வாடியபயிர்


ஊர் எல்லையில் அது நடந்துவந்து கொண்டிருந்தது. அதன் நடையில் எதுவும் வேகமில்லை, பதட்டமில்லை, அவசரமில்லை. சுட்டெரிக்கும் வெயில் அதை எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை. கைகள் வெண்ணிற ஆடைக்குள் பொதிந்திருக்க அதன் சிந்தை எங்கோ ஒன்றி நினைவுகள் அதைத் தின்றுகொண்டிருக்கக் கால்கள் தாமே பாதையைக் கவனித்து நடந்துகொண்டிருந்தன.
வானில் வெண்பஞ்சுப்போல மேகங்கள் அங்கொன்று மிங்கோன்றுமாகத் திரிந்துகொண்டிருந்தன. மேகங்களின் தயவால் நிழல் சிறிதுநேரம் தோய்ந்தும் சிறிதுநேரத்தில் மீண்டும் வெறிகொண்ட சூரியன் வெளிப்பட்டுச் சுடுவதுமாகச் சூழல் மாறிக்கொண்டேயிருந்தது. தூரத்திலிருந்து பார்ப்பதற்குச் சிதறிய வெண்மேகத்துளியொன்று மேலிருந்துக் கீழிறங்கி நடந்து செல்வதைப் போல அது நடந்துச் சென்றுகொண்டிருந்தது.
சிறிது அசைந்தாலும் எங்கே சக்தி வீணாகிவிடுமோ என்றுபயந்து மரங்களெல்லாம் அசைவின்றித் தவம் செய்துகொண்டிருந்தன. காற்றும் அவற்றுடன் சேர்ந்துகொண்டதோ என்னவோ அதன் அசைவையும் அங்குக் காணமுடியவில்லை. மரங்களில் வழக்கமாகப் பறவைகள் அமருமிடமெல்லாம் காலியாக இருந்தது. புளியமரத்தின் மேலிருந்த ஆந்தை புகைபோல ஒன்றுத் தன்முன் நடந்துச் சென்றுகொண்டிருப்பதை கண்ணை விழித்துவிழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. காரைச்செடியின் மேல் தோன்றிய ஒரு ஓணான் சிறிது எக்கி எக்கித் தனதுத் தலையை நான்குமுறைத் தூக்கிவிட்டுக்கொண்டுச் சுற்றியும் தனது கண்களை உருட்டிச் சுழலவிட்டது. திடீரென்று எதையோ உணர்ந்ததுபோலக் குதித்து ஓடிப் புதரில் ஒழிந்துகொண்டது. சே இன்னிக்கும் பட்டினிதான்என்று மனம் சலித்துக் கொண்ட ஆந்தை சடசட வென்று சிறகடித்து வேறு இடம் நோக்கிப் பறக்க அது அமர்ந்திருந்த கிளையிலிருந்து காய்ந்த சுள்ளி ஒன்று பொக்கென்று ஒடிந்து கீழேவிழுந்து சரிவில் மெத்தென்றுமூடி இருந்த காய்ந்தச் சருகுகளின் மேல் சரசரவேன்றுச் சறுக்கிச் சென்றது. எந்தச் சப்தமும் அதன் கவனத்தை கலைத்ததாகத் தெரியவில்லை.
ஊருக்குள்ளே பருத்தியம்மா சமையல் கூடத்தில் உருளைக்கிழங்கை அரிந்து கொதிக்கின்ற குழம்பில் போட்டுக் கொண்டிருந்தாள். வீட்டின் உள்ளிருந்து எதோ சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பருத்தியம்மா சிறு புன்னகையுடன் டேய் செல்லமணி அதோட வெளயாடாதே வொன்னால அதப்பிடிக்க முடியாது. அடிச்சி அடிச்சி வொன்னோட கைதான் வலிக்கப்போகுது சொன்னாக்கேளு.
பருத்தியம்மாவின் அதட்டும் சப்தம் கேட்டும் கேட்காதது போல அந்தக் குழந்தைத் தனது கைகளைக் கொண்டு கூரையில் இருந்து இறங்கும் அந்த ஒளியைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. ஒளியோடு கீழே இறங்கிய மேகத்தின் நிழல்கள் தரையில் நகர்வதைப் பார்த்து வியந்தக் குழந்தை அதைப் பிடிக்க முயன்று முயன்று வலியையும் பொருட்படுத்தாது தனது கைகளை அதன்மீது அடித்துக் கொண்டிருந்தது.
அடிப்படியிலிருந்து தலையை முடிந்துக் கொண்டைபோட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்த பருத்தியம்மா. குழந்தையை எடுத்துத் தூளியில் போட்டுவிட்டு கூரையை ஊடுருவும் அந்த வெளிச்சத்தைப் பார்த்தாள். இந்தவாட்டி வெள்ளாமை வெளஞ்சிருந்தா இதமாத்திடலாம்னு மச்சான் சொல்லியிருந்தாரு ஆனா இந்தவருஷமும் எல்லாம் போச்சி. என்று நினைக்கும்போதே அவளது தொண்டை அடைத்துக்கொண்டு வயிற்றை ஏதோசெய்தது. போன வருஷம் ஒருஓட்டை மட்டுமே இருந்தக் கூரையில் இப்போது பத்து ஓட்டைகள் சின்னதும் பெரியதுமாக ஆகிடுச்சி.
மனதிலிருக்கும் பாரத்தையெல்லாம் அள்ளிக்கொண்டு வெளிவருவதுபோல அவளிடத்திலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்து வெளியில் உள்ள காற்றில் கலந்து மறைந்தது. மழை பெஞ்சதுன்னா அல்லாத்தையுந் தூக்கிக்கிட்டு பஞ்சாயத்துச் சாவடிக்குத்தான் போயி ஒதுங்கிக்கணும். ஒருவேளை திடீரென்று மழைவந்தால் என்ன செய்வதென்று சில பொருட்களை மட்டும் ஒரு மரப்பெட்டியில் போட்டு அதைக் கண்ணாடிக்காகிதம் போட்டு மூடிவைத்திருந்தாள் பருத்தி.
வெளியே தாழ்வாரத்தில் அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது ஒரு தட்டுப்போட்டு மூடிவிட்டு உள்ளே வந்திருந்தாள். இந்த வாரம் பலசரக்கு பாக்கிய கொண்டு குடுக்கலன்னா செட்டியார் அரிசியும்பருப்பும் இனிமேத் தரமாட்டாரு. மூணுமாசமா கடன் கொஞ்சங்கொஞ்சமாச் சேந்து இப்போது மொத்தம் பதினஞ்சிரூவாஎட்டணா ஆயிடுச்சி. போனமுற போயிருந்தப்பவே செட்டியார் கோவிச்சிக்கிட்டாறு. நான் கைகாசு போட்டுத்தானே சரக்கு வங்கி வாங்க்கியாறேந் தாயீ. டவுணுகடையில எனக்கு சும்மாவா கொடுக்கிரானுங்க என்று சலித்துக் கொண்டார். இந்த ஊர்ல அவர்கடை ஒண்ணுதான் இருக்கு. வேறக்கடைக்கு போவணுன்னா டவுணுக்குத்தான் போவணும்.
எங்கிருந்தோ வந்த கருவண்டு ஒன்று ஓய்ங் என்று சப்தமிட்டபடி வீட்டின் நடுவில் உத்திரத்திற்குத் துணையாக நட்டிருந்த மரத்திலுள்ள துளையில் நுழைந்துகொண்டது.
வேறே வழியில்லன்னா வளையலை வித்திட்டு சோளத்தட்டையும் புண்ணாக்கும் மூணுமாசத்துக்கு வீட்டுக்கு அரிசியும் பருப்பும் வங்கிடவேண்டியதுதான். செட்டியாரோடா கடனையும் செட்டில் பண்ணிடலாம் அப்புறம் ஆறுமாசத்துக்கு அவர்ட்ட தெகிரியமா கடன் கேக்கலாம்.
அங்கே கொதித்துக் கொண்டிருந்தக் குழம்பை மூடியிருந்தத் தட்டு துள்ளிக் குதித்துக் கீழே அடுப்புக்கல்லின் மீது விழுந்தது.
சப்தம் கேட்டுச் சட்டென்று பருத்தி ஓடுவதற்குள் வெளிக்காற்று குழம்புச் சட்டிக்குள் நுழைந்து பருத்தி செய்யவேண்டிய வேலையைச் செய்து முடித்து நுரையடங்கிய குழம்பு மீண்டும் கீழிறங்கிக் கொதித்துக் கொண்டிருந்தது. பருத்தியும் தன் பங்குக்குத் தாவாரத்தில் சொருகி வைத்திருந்த கரண்டியை எடுத்து ஒரு கிண்டுக்கிண்டிவிட்டு காய் வெந்திருக்கிறதா என்று எடுத்துப்பார்த்தாள்.
பருப்போடு ஒட்டிக் கொண்டு வந்த ஒன்றிரண்டு உருளைக் கிழங்குகளில் ஒன்றை மட்டும் எடுத்து நசுக்கிப் பார்த்தாள். எங்கேருந்துதான் எழவெடுத்தவனுங்க இந்த கெழங்க கொண்டாரானுங்கன்னே தெரியல கல்லு மாதிரி வேகவேமாட்டேங்குது. என்று நொந்துகொண்டே மீண்டும் சட்டியில் போட்டுவிட்டு அந்த நெளிந்துபோன பாதித் தேய்ந்த அலுமினியக் கரண்டியால் மீண்டும் ஒரு கிண்டுகிண்டி விட்டுவிட்டு மாராப்பை இழுத்து மார்புகள் வெளியே தெரியாமல் இடுப்பில் சொருகிக் கொண்டாள். ஒட்டி இருந்த இணையடுப்பில் வடை சட்டியில் முருங்கைக் கீரை ஆகி முடிந்து தட்டுப்போட்டு மூடிக் கிடந்தது.
காலுக்குக் கீழே கிடந்த ரப்பர் பொம்மையை எடுத்து பீ பீ என்று இரண்டு அமுக்கு அமுக்கிவிட்டு தூளியில் உள்ளே தூக்கிப்போட்டாள். அதற்கென்றே காத்திருந்ததுபோல உள்ளே இருந்த கைகள் அதை எடுத்து தன் பங்குக்கு அழுத்தி மீண்டும் மீண்டும் ஒலிஎழுப்பியது. அந்தச் சந்தோசத்தில் அப்படியும் இப்படியும் அசைந்த தூளியுடன் இப்போழுதோ அப்பொழுதோ வென்று மூங்கில் உத்தரமும் உடன் அசைந்தாடிக் கொண்டிருந்தது.
மாட்டுச் சலங்கை சப்தம் கேட்டு வெளியே வந்தாள் பருத்தி.
ஹைஹை பும்பும் புர்ர்ர்.. என்னம்மா சந்தையிலே எதுன்னா வாங்கியாரணுமா என்ற மாயாண்டியண்ணனின் சப்தம்கேட்டு மண்சாலையின் பக்கம் திரும்பினாள்.
கைகள் மூக்கணாங் கயிற்றை லாவகமாகச் சொடுக்க தார்குச்சியை திருப்பி ஊசியால்குத்தி மாடுகளை நடத்திக் கொண்டிருந்தான் மாயாண்டி. வண்டி பள்ளத்தில் இடறிச் சாய்ந்துவிடாமல் சமாளித்து வந்துகொண்டிருந்தது.
அண்ணே நீங்க போயிட்டு பொழுதோட வந்துருவீகளா இல்ல நாளக்கித்தான வருவீங்களா.
ஹோய் ஹோய் ஹோய் மாயாண்டியின் கைகள் கயிற்றை இழுத்துப் பிடிக்க மயிலைக் காளைகள் இரண்டுக்கும் அவன் இழுத்த வேகமும் வேதனையும் பொறுக்க முடியவில்லை. ஒருவழியாக அவன் கயிற்றைச் சுண்டுகின்ற பாசைக்குக் கட்டுப்பட்டு தடுமாறிப் பிரண்டுகொண்டிருந்தக் கால்களைச் சமாளித்து ஆழமாகத் தரையில் ஊன்றித் தலையை ஒருபக்கமாகச் சாய்த்து விண்ணைநோக்கி எக்கிக் கொண்டு ஞேஎன்று பார்த்துக் கொண்டுநின்றன.
வண்டியின் பின்னால் சிறிது தூரத்தில் உடன் வந்துகொண்டிருந்த கருப்புவும் வண்டி நிற்பதைக் கண்டு மாயாண்டியின் கீழே வந்து நின்று வாலாட்டிவிட்டு. பருத்தியை பார்த்துக் குறைத்தது. பின்னர் இது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல மீண்டும் தலையை குனிந்து தரையில் எதையோ தேடுவதுபோல வண்டிப் பாதையில் முன்னே செல்ல ஆரம்பித்தது.
டவுணு கடைல பால்பாவுடர் இருந்தா வங்கியாந்து தாரீகளாண்ணே. மாடெல்லாம் வத்திப் போச்சிண்ணே எனக்கும் சாப்பாடு சரியில்ல அதுனால ஊருவைத்தியரு பவுடர்பால் கெடச்சா கொஞ்சம் சேத்துக்கச் சொன்னாரு. மச்சான் ஏரிக்கரப் பக்கந்தே மாடுமேக்கப் போயிருக்கு நீங்க போவுற தடத்துலதேங் கெடக்கும். போகையில சாப்பாட்டுக்கு நேரமாச்சி நா வரச் சொன்னேன்னு அப்பிடியே ஒரு சத்தம் போட்டுட்டு போங்கண்ணே.
என்னண்ணே டப்பா வங்கியாரீங்களா? அவள் கூறியதை நினைவில் பொதிந்துகொண்டிருந்த மாயாண்டியை மீண்டும் நினைவூட்டினாள் பருத்தி
அதுக்கென்ன தாயீ காசு கொடுத்தா வங்கியாறேன்.
சரி இருங்கண்ணே இதோ வந்துட்டேன் என்று வீட்டிற்குள் நுழைந்தாள்
அரிசிப் பானையிலிருந்த ஒருருபாய்நாலணாக் காசை எடுத்து வந்து மாயாண்டிகையில் திணித்துக் கொண்டே அவசரச் செலவுக்குன்னு வெச்சிருந்த காசுண்ணே ஒரு பெரிய டப்பாவா கெடச்சா வாங்கியாந்துடுங்க.
போவுறவழில தண்ணித் தவிச்சாக்க இந்தத் தண்ணிய குடிச்சுக்கோங்க அண்ணே என்று சொல்லி மற்றொரு கையில் கொண்டுவந்த சுரைக்குடுக்கையையும் மாயாண்டியிடம் கொடுத்துவிட்டு வண்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டாள்.
காசை வங்கி இடுப்பில் வேஷ்டிமடிப்பில் சொருகிக் கொண்டுச் சுரைக்குடுக்கையின் கையிற்றை வண்டிப் பலகையில் தனதருகே ஊன்றியிருந்த புரசங்கழியில் ஒருசுற்றுச் சுற்றிவிட்டு வைத்துக் கொண்டான் மாயாண்டி. அவன் மாடுகளைப் பிடித்திருந்த கைகளின் இறுக்கத்தைக் குறைத்துக்கொண்டு ஹை ஹை என்று கயிற்றைத் தளர்த்திச் சுண்ட வண்டி நகரஆரம்பித்தது. மீண்டும் மாடுகளின் ஜல் ஜல் ஜல்சலங்கைச் சப்தம் காற்றில் புகுந்து பரவ ஆரம்பித்தது.
வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்த பருத்தியின் நெஞ்சையும் மெலிதாக ஊடுருவியது அந்தச் சலங்கைச்சப்தம். தூளியிலிருந்து வெளியில்வந்துத் தொங்கிக் கொண்டிருந்த வெறும் கால்களை தூக்கி மீண்டும் உள்ளே போட்டுவிட்டு, அடுத்த வெள்ளாமைல கூலிவேலை செஞ்சாச்சும் காசுபாத்து சலங்கை யொண்ணுவாங்கி புள்ளக்கி போட்டுரணும் என்று நினைவுறுத்திக் கொண்டாள்
ஊருக்கு வெளியே அது இன்னும் நடந்து வந்துகொண்டிருந்தது.
காற்றில்ச் சலனமில்லாதது போலவே எங்குமே ஈரப்பதமிருப்பதாகவும் தெரியவில்லை. புற்களொல்லாம் மடிந்துக் கள்ளிக்கும் காரைச் செடிகளுக்கும் உரமாகிவிட்டிருந்தன. தூரத்துவானத்தில் சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டு தனது கூர்மையான பார்வையை கீழே வீசி இரைதேடிக்கொண்டிருந்ததன.
அது எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. சிறிது நாக்கைச் சுழற்றி உதட்டைத் துடைத்து எச்சியைகூட்டி விழுங்கித் தன் தாகத்தை தணித்துக் கொள்ள முயற்சி செய்தது. நாக்கை சுழற்றியபோது உதட்டில் தென்பட்ட ஈரத்தில் சிறிதுஉப்பு கலந்திருந்தது. மண்ணில் ஈரமில்லையா, காற்றில் ஈரமில்லையா, மனிதர்களின் மனதில் ஈரமில்லையா, விண்ணிலேயே ஈரமில்லையா, ஏனிந்தவறட்சி என்றொரு சிந்தனை அதன்மனதில் நெருடியோடிக் கொண்டிருந்தது.
வழக்கமாக பட்டுப் போன்ற புற்களை மிதித்தே பழக்கப்பட்ட அதன் கால்கள் இன்று கற்களையும் சருகுகளையும் காய்ந்தச் சுள்ளிகளையும் முட்களையும் மிதித்து நடந்துகொண்டிருந்தது.
அதன் கண்களிலிருந்து பெருகிய நீர் வெளியில் காணாத ஈரத்தைச் சரி செய்யும் முயற்சியில் தோற்றுப் பின்னர் வழிந்து அதன் நெஞ்சை நனைந்துக் கடந்து அதன் கால்கள்வரை நீண்டுவழிந்துகொண்டிருந்தது. ஈரத்துடன் உறவாடியதால் அதன் உடைகள் நெஞ்சோடு தோய்ந்து ஒட்டிக்கொண்டிருந்தன. நடக்கும் வழியில் உள்ள முள்ளிற்குக்கூட முனை ஓடிந்துவிடாதவாறு அதன் கால்கள் பக்குவமாகச் சரியானப் பாதையைத்தேடித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தன.
அது இப்பொழுது எதிரில் தெரிந்த எரிக்கரையின் மீது ஏறி நடக்க ஆரம்பித்திருந்தது.
ஏரியின் தரையெல்லாம் பாளம்பாளமாகப் பிளந்துக் கிடந்தது. ஏரி முழுவதும் நீர் நிறைந்திருப்பதுபோன்றத் தோற்றத்தில் கானல்நீர் கடல்போல நிறைந்துத்ததும்பி அலையடித்துக் கொண்டிருக்க அதில் தூரத்தில் காய்ந்துத் தொங்கிக் கொண்டிருந்த பனைமரங்களின் உருவங்கள் தலைகீழாக தெறிப்பதுவும் பின் மறைவதுமாக இருந்தது.
அது நடந்துவந்த பாதையில் எதிரே தூரத்தில் கானல்நீருக்கிடையே சலங்கையோசையுடன் தெளிவில்லாமல் ஒரு பொருள் அசைந்து அசைந்து அதை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருந்தது.
மண் சுடுகின்றதா அல்லது அதன் உள்ளிருந்து வழிந்தோடிய கண்ணீர் காலைநனைப்பதால் அதற்குச் சூடுத் தெரியவில்லையா. அது கரையிலிருந்து வரப்பில் இறங்கிக் காய்ந்துபோன நெல்வயல்களுக்கிடையே நடக்க ஆரம்பித்திருந்தது.
ஒய் யாருப்பா அது இந்த மட்டமத்தியான வெய்யில்ல இப்புடிப் போறது. எந்தூருப்பா
அது சுற்றியும் பார்த்தது. மாயாண்டியின் அதட்டுகின்றதொனி அதற்கு எங்கோ சூனியத்திலிருந்து யாரோ கத்துவதுபோல மெலிதாகக்கேட்டது. ஆனால் அதன் கவனம் இன்னும் சிதறியதாகத் தெரியவில்லை.
பாதத்திற்குக்கீழே தண்ணீர் ஓடுகின்ற சுகம் அதற்கு எப்பொழுதும் பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதற்கான அறிகுறி இன்று எங்குமே தெரியவில்லை. வாய்க்காலிலும் வயலிலும் அதன் பார்வைப்பட்ட இடங்களிலெல்லாம் கரம்பை மண் வாய்விட்டு வெடித்து விரிந்துக் கிடந்தது. அதில் நண்டோடுகளும் நத்தையோடுகளும் தவளையின் கூடுகளும் அங்கங்கே இரைந்துக் கிடந்தன.
ஏய் யாருப்பா அது அதாங் கேக்குரோம்லம்ஹூம் அதுச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
எதிரில் வரப்புச் சந்திப்பு வந்ததும் அதன் பாதங்கள் நின்றன. அதன் பார்வை சுற்றிலும் எதையோ ஏங்கித் தேடிக்கொண்டிருந்தது. விண்ணை நோக்கி அசைந்தாடி இருக்கவேண்டிய பயிர்கள் அனைத்தும் மண்ணைத் தொட்டு மடிந்து மண்ணுக்கு உரமாகிக்கொண்டிருந்தன. மாடுகள் அங்கங்கே வயலில் இந்த காய்ந்த பயிர்களை மேய்ந்துகொண்டிருந்தன.
பார்த்துவந்த எந்தக் காட்சியும் அதற்கு இன்பம் தந்ததாகத் தெரியவில்லை. அதன் கண்கள் தான்கண்ட காட்சிகளை எல்லாம் வாரிச்சுருட்டிக் கொண்டு மேலேறி உச்சியில் ஒடுங்கிக் குத்திக் கொண்டது. கால்களுக்குக் கீழே பூமி நழுவிவிட்டது போலிருந்தது அதற்கு. அதன் உடலிலிருந்து வேர்வை ஆறாகப் பெருகிவர கால்கள் தளர்ந்து நினைவற்று வாடிச்சரிந்து அப்படியே வரப்பில் விழுந்தது.
டேய் மருது சீக்கிரம் வாடா. வொன்னோட வயக்காட்டுல யாரோ மயக்கம்போட்டு விழுந்துட்டாங்கஎன்ற மாயாண்டியின் சப்தம் கேட்டு தூரத்தில் மாடுகளை மேயவிட்டுவிட்டு மரத்தடியில் சுருண்டுக்கிடந்த பருத்தியின் கணவன் மருது திடுக்கிட்டு எழுத்தான்.
என்னமாமா இதோ வந்துட்டேன் என்று கத்திக்கொண்டு மருது வருவதற்குள் மாயாண்டி துள்ளிச் சென்று அதைத் தூக்கித் தனது கைகளில் தாங்கிக் கொண்டிருந்தான். பார்ப்பதற்குப் பெரிய உருவமாக இருந்தாலும் அவரைக் கையில் தூக்கியவுடன் ஒரு மலர்க்கூடையை தூக்குவதுபோல எளிதாகவே வந்துவிட்டது மாயாண்டிக்கு.
மருது ஓடிப்போயி வண்டியில இருக்கிற சுரைக்குடுக்கைல தண்ணியிருக்கு எடுத்துட்டுவா. மருது வண்டியை நோக்கி ஓடினான்.
அதனிடத்தில் அசைவுகள் ஏதுமில்லை. மாயாண்டிக்கு மனம் திக்கென்றது. அவன் கைகள் அதன் மூக்கினருகில் சென்றது. மூச்சு அசைவது போலவும் தெரியவில்லை நின்றுவிட்டது போலவும் தெரியவில்லை. குழப்பத்துடன் கையை எடுத்துவிட்டான்.
சுரைக்குடுக்கையில் இருந்த தண்ணீரை அதன் முகத்தில் தெளித்துவிட்டுச் சிறிது அதன் உதடுகளைத் திறந்து வாயில் ஊற்றினான். டேய் மருது மூச்சுஇருக்கா இல்லையான்னு தெரியலைடா என்று சொல்லிக் கொண்டே அதைக் கீழே விழுந்துவிடாமல் மாயாண்டியின் கைகள் இறுக்கிப்பற்றியது. அவன் உடல் அதன் மீது படப்பட அது உள்ளிருந்து மாயாண்டியைச் சிறிது சிறிதாகப் பற்றிக்கொண்டிருந்தது.
ஒளிவீசிக்கொண்டிருந்த அதன் முகம் அவனது கண்களில் நுழைந்து நெஞ்சைக் குடைந்து ஏதோ செய்தது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான் மாயாண்டி. சூரியனின் கதிர்களைப் பார்க்கக் கண்கள் கூசியதுதிரும்பி தன்கைகளில் மாலையைப்போலத் துவண்டுக்கிடந்த அதைப் பார்த்தான். மேலே பார்க்கக் கூசிய சூரியனின் கதிர்கள் அதன் தலையிலிருந்தும் வெளிப்பட்டு வந்துகொண்டிருப்பதைப் போல ஒரு பிரமை தோன்றியது மாயாண்டிக்கு.
கண்ணைக் கசக்கிவிட்டுக்கொண்டு தனது இடுப்பிலிருந்த துண்டை உருவி அதன் முகத்தைத் துடைத்துவிட்டுவிட்டு, அதன் தலையைவிட்டு விலகிக்கிடந்த முக்காடைச் சரிசெய்து மீண்டும் மூடிவிட்டான். மீண்டும் கைகளிலிருந்துச் சரிய முயன்ற அந்த வெள்ளைப் பொதியை கீழேவிடாமல் பிடியையிருக்கிக்கொண்டு அதைத் தன்மார்போடு இழுத்தணைத்துக் கொண்டவுடன் அதனிடமிருந்து மயண்டியின் நெஞ்சைக் கதகதப்பாக எதோ ஒன்று ஊடுருவுவதைப் போலவுணர்ந்தான். என்னவென்று புரிவதற்குள் சட்டென்று அவனது அபானத்திலிருந்து ஏதோவொன்று எழுந்துக் கிளம்பி மின்னல்போல வெட்டிக் கொண்டு முதுகைக் கடந்து கபாலத்தின் உச்சியைச் சென்றுத்தாக்கியது. தலையை யாரோ பஞ்சைவைத்து ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது மாயாண்டிக்கு. அவனது சிரசு சிலிர்த்துக் கொண்டு மயிர்கள் கூச்செரிந்துகொண்டன. சிறிது கண்கள் சொருகி மயக்கம் வருவது போலிருந்தாலும் சமாளித்துக் கொண்டான் மாயாண்டி. எதோ பித்தம் ஜாஸ்தியாயிடிச்சி போலருக்கு நேத்துச் சாப்ட்ட மீன்கொழம்பு சேரலபோல அதான் ஒருமாதிரி கெறக்கமா வருது எனக்கும்என்றுத் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான்.
அதனிடமிருந்து சிறிது ஆசுவாசமாக மூச்சு வெளிவருவதைப் பார்த்தவன் நல்லவேளைடா மருது இவருக்கு மூச்சு லேசாவந்திட்டு இருக்குடா. என்று அதன் கைகளைப் பிடித்து நாடியைப் பார்க்க. உயிர் இருப்பதன் அறிகுறி தெளிவாகத் தெரிந்தது. சிறிது சந்தோசத்துடன் யாருன்னு தெரியலையேடா. இப்பிடி ஒருத்தர நம்மஊருல பாத்தாமாதிரித் தெரியலையே மருது. நீஏதும் பாத்திருக்கியாடா என.
இல்ல மாமா. நம்ம நாட்டாமையோட அம்மாதான் இவரப் போல வெள்ளை வேட்டியச் சேலையாட்டங் கட்டிக்கிட்டு தலைக்கி முக்காடு போட்டுட்டு இருப்பா. நான் புல்லறுத்து போடுறப்ப பாத்துருக்கேன்”.
சரி தூக்குடா போகலாம்.
அது இருவரின் கைகளிலும் தவழ்ந்து வண்டியை நோக்கிப் பயணப்பட்டது. இங்கே பாருங்க மாமா இந்த வரப்புல மட்டும் புதுசா புல்லு துளுத்திருக்கு? எங்கியுமே தண்ணியே இல்லாம எப்படி இங்கமட்டும் திடீர்ன்னு புல்லு வந்துச்சு? நானும் ஒரு மாசமா மாடுமேக்கிறத்துக்கு இங்கயேதான் அலையறேன் எங்கியுமே ஒரு பொட்டுப் புல்லக்கூட நாம்பாத்ததில்ல. மாடுங்களே உசுரக் காப்பாத்திக்கிறதுக்கு சருகத்தான் தின்னுதுங்க என்று தலையைச் சொரிந்துகொண்டே மருது என்ன மாமா ஆச்சி இவருக்கு என்றான்.
கரையிலேந்து கத்துனேண்டா எந்த பதிலுமில்லே அவுருபாட்டுக்கு போயிக்கிட்டே இருந்தாரு. பாத்துட்டுறுக்குறப்பவே திடீர்னு குறுக்கு வரப்புல வாடுனபயிறுமாதிரி அப்பிடியே மடார்னு கீழசாஞ்சிட்டாருடா ஒரு சுரத்தையுமில்லாம. ஈரக்கொலையெல்லாம் ஆடிப்போச்சிடா அப்பிடியே துள்ளிக் குதிச்சு ஓடியாந்தேன். நல்லவேளையா நாம பாத்தோம். நல்லாத் தூக்கிப் புடிடா இந்தா வண்டி வந்துருச்சி.
பாத்தா பயித்தியம் மாதிரித் தெரியல மூஞ்சில ஒரு ஒளி இருக்குடா. உசிருக்கு ஒண்ணுமில்ல கொஞ்சம் மயக்கந்தான் யாருன்னு வெசாரிச்சி வீட்டுல கொண்டுபோயிச் சேத்துப்புடலாம் வாடா என்று வண்டியில் கிடத்திக்கொள்ள, மருதுதன் துடைமீது அதன்தலையை அணைப்பாகச் சாய்த்துப் பிடித்துக்கொண்டான்.  அது இன்னும் மயக்கத்திலேயேதான் இருந்தது. மாமா நீங்க வண்டிய ஓட்டுங்க நான் இவருக்கு கொஞ்சம் தண்ணியக் கொடுக்கறேன். கருங்குழி வந்தோடனே நிறுத்திப்பிட்டு சாமியண்ணன் வைத்தியர்ட்ட ஒரு பார்வை காட்டிடலாம். அப்புடியே அங்கியே யாருங்கரதையும் கேட்டுக்கலாம் மாமா.
மருதுவுக்கு அவர் முகத்தைப் பார்க்கப்பார்க்க அங்கே வரப்பில் புதிதாகத் துளிர்த்திருந்த புற்களின் காட்சி வந்து சென்றுகொண்டிருந்தது. வண்டியிலிருந்து திரும்பி வரப்பைப் பார்க்க, அவர் நடந்துகொண்டிருந்த அந்த வரப்பில் மட்டும் சிறிய பச்சைக் கோடு எரிக்கரையிலிருந்து அவர்விழுந்த இடம்வரையும் நீண்டுச் சென்றிருந்தது அவன் பார்வைக்குத் தெரிந்தது.
மாயாண்டி மாடுகளின் கயிற்றை தளர்த்திப் பிடித்துக்கொண்டு ஒரு சொடுக்கு சொடுக்கினான். அவன் சைகையைப் புரிந்துகொண்ட மாடுகள் வண்டியை இழுத்துக் கொண்டு மீண்டும் நகர ஆரம்பித்தன. ஜல் ஜல் ஜல் எனும் சப்தம் மீண்டும் காற்றில் பரவி ஒலிக்க ஆரம்பித்தது.
எரிக் கரையிலிருந்து எதிரே தெரிந்த கும்பெனிக்காரன் போட்டிருந்த பெரியமண் சாலையை அடைந்தவுடன் ஹோய்ஹோய் என்று கத்திக் கொண்டு மாடுகளை வேகம் கொடுத்து விரட்டினான் மாயாண்டி.
மருது வண்டியின் வேகத்தில் அவரது தலை வண்டியில் ஏதும் பட்டுவிடுமோ என்று பக்குவமாக பிடித்துத் தன்மீது சாய்த்துக் கொண்டே சாலையைப் பார்க்க வண்டி எதிரே சாலையிலிருந்த வடலூர் 10மைல் என்கின்ற மைல்கல்லைக் கடந்துகொண்டிருந்தது.
தொடுவானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. அங்கே பாருடா மருது எங்கியோ மழை பேயுதுடா. லேசா வாடக்காத்தும் அடிக்குது பாரு. காத்தோட போக்கப் பாத்தா இன்னிக்கி நம்ம ஊருலயும் பெய்யும் போலருக்குடா என்றான் வண்டியை விரட்டிக் கொண்டே.
பருத்தியின் வீட்டுக் கூரைவழியே சிலவிண்துளிகள் நுழைந்து தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. பருத்தி பாத்திரங்களை எடுத்துக் கூரையின் ஒவ்வொரு துளைக்கும் நேரே சரிபார்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
######## நலம் ##########                            
எழுத்தாக்கம்
RAVIKUMAR P
ravikumar.writerpoet@gmail.com
PH:  7904313077, 9841189033

சொர்க்கவாசல்



சோழிகள் குலுங்கிச் சிதறின அதனுடன் “பத்து பத்து” என்று ஒரு சப்தமும் “இல்லை பன்னெண்டு பன்னெண்டு” என்று மற்றொரு குரலும் அந்த சோழிகளுடன் குலுங்கிக்கொண்டு ஊடோடின.   சோழிகள் இருவரின் பேச்சையும் கேட்காமல்  எட்டுபோட்டுவிட்டு அசைந்தாடி நின்றன.
     சித்ரா நல்லவேளை தப்பிச்ச இன்னும் ஒரு ரெண்டு சேந்து விழுந்திருந்ததுன்னா இந்நேரம் பெரியபாம்பு கொத்தி  ஆரம்பிச்ச எடத்துக்கே போயிருப்ப சித்ரா என்றாள் சாரதா. அதென்னக்கா அந்த ரெண்டு விழுகாமையே நானு வாழ்க்கயத் துவங்குன இடத்துலதான இருக்கேன். பரமபதம் ஆடுரப்பவாச்சும் பாம்பு கடிக்காம இருந்தா ஒரு சந்தோசந்தான்.
ஜோசியர் காலசர்ப்பதொசம் இருக்கறதால ராமேஸ்வரம் போயி பரிகாரம் செய்யணுன்னு சொன்னாரு.  ஏற்கனவே வாழ்கையில பாம்பு கடிச்சி வீங்கிப்போனதால பரமபதத்தில பாம்புங்க என்ன ஒண்ணும் செய்யறதில்ல போலருக்குக்கா.
 அதென்னடி ஆம்படையான் ஓடிப்போயிட்டா வொனக்கு வாழ்கையே அத்தமிச்சிட்டமாதிரி பேசற. செகண்ட் மாரேஜ்லாம் இப்ப சர்வசாதாரணம் ஆயிடுச்சி. ஆனா என்ன நீ பிராமணாளா வந்து பொறந்து தொலைச்சிட்டே. வொனக்குக் கலியாணமே முப்பதுலதான ஆச்சி ரெண்டே வருசத்துல ஆம்படயான் ஓடிப் போயிட்டான்.  வொங்கிட்டே என்ன இல்லன்னு காணாமப் போயிட்டான், இல்ல எதைத் தேடிண்டு போனான்னும் தெரியல.  நல்லா சமைக்கத் தெரியுது பக்தியா இருக்கத் தெரியுது யாருக்கும் எனக்குத் தெரிஞ்சி நீ பெருசா துரோகம் பண்ணதில்லை.  தெய்வக் குத்தமோ இல்ல ஒன்னோட பூர்வஜென்ம பாவமோ இப்புடி ஆயிடிச்சி வொனக்கு என்று சாரதா அங்கலாய்த்தாள். 
     இந்த பேச்சுக்களை இரண்டு வருடமாக கேட்டு கேட்டுப் பழகிவிட்ட சித்ராவுக்கு அக்காவின் பேச்சைவிட அடுத்து ஒரு நாலு போட்டு ஏணியில் ஏறி பரமபதத்தின் அடுத்தபடிக்கு சென்றுவிடவேண்டுமென்று மனம் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது.
    சித்ரா கேட்டபடி நாலு விழுந்தது.   சித்ரா தனதுகாயை எடுத்து சந்தோசமாக அந்த சிறியஏணியில் ஏற்றி பெரிய பாம்புக்கு மேலிருந்த கட்டத்தில் வைத்துவிட்டு சாரதாவை வெற்றிக் களிப்போடு பார்த்தாள். 
    இதுல எல்லாம் உனக்கு கைராசி தான்டீ கேட்ட நம்பர் வொன்னோட கைய்யில சகுநியாட்டம் அப்பிடியே வந்துவிளையாடுது. ஆனா வொன்னோட வாழ்க்கையிலதான் எங்கியோ ஒருசுழி மாத்தமுடியாம ஒன்ன சுழிச்சிட்டு  போயிடுச்சி.
     சாரதாவுக்கு தான் தொல்வியடையப் போகின்றோம் என்பதைவிட சித்ரா வாழ்கையில் தோற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டுமென்பதே நோக்கமாக இருந்தது. ஒரு முறையாவது ஜெயித்திருந்தால் பரவாயில்லை ஒவ்வொரு முறையும் சித்ராவே ஜெயித்தால் என்ன செய்வது. புண்பட்ட மனது அவளது குறைகளைச் சொல்லி ஆறுதலைத் தேடிக் கொண்டிருந்தது.
  என்ன மாமி இன்னிக்கு ஏகாதசி ஒருவேள அன்னந்தான் அதான்   சோழி உருளறது திண்ணேல  போஜனம்ல்லாம் ஆயிடிச்சா  என்று அவர்களது கவனத்தைக் கலைத்தார் சுந்தரம் ஐயர்.
     ஆயிடிச்சி மாமா  கோவிலுக்கு போற வரைக்கும் கொஞ்சநேரம் பகவான நெனச்சிட்டிருக்கணுன்னு பரமபதம் ஆடிட்டிருக்கோம்.
     ஏண்டி சித்ரா ஒன்னோட ஆம்படையானபத்தி தகவல் ஏதும் தெரிஞ்சிதா.
இனிமேல் தாயம் போட்டால்தான் பரமபதம் ஏறமுடியும் என்று டென்சனில் இருந்த சித்ரா “ தெரியல அத்திம்பேர்  நீங்க வேணா ரெண்டாந்தாரமா கட்டிகிறேளா.  அதான் பட்டுமாமிக்கு டிபி ஆஸ்துமான்னு நீங்க படுறபாடு இந்த அக்ரகாரம் பூராத் தெரியுமே.”
     ஐயருக்கு சித்ராவின் மேல் ஒரு கண் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்துகொள்வார்.
     அதான் ஒனக்கும் எனக்கும் பகவான்  ஒரு எழுத்து எங்கியோ மாத்தி எழுதிண்டுட்டான்.  ரெண்டுபேரோட வாழ்க்கையும் காதந்த ஊசியாட்டம் ஆயிடிச்சி எதயும் கோக்கமுடியல. வரப்ப என்ன வரம் வங்கிண்டு வந்தோம்ன்னு தெரியல இப்பிடி அல்லாடுறோம்.  என்ன கொடுப்பின இருக்குன்னு பகவான்ட்ட கேப்போம்.  “ஹூம்” பகவான் மனசு வச்சா நடக்கட்டும் என்று தனது ஆதங்கத்தையும் வெளிபடுத்திக் கொண்டார்.
     ஆத்துலருந்து இப்ப நம்மபெருமாள் கோவிலுக்குத்தான் போயிண்டு இருக்கேன். ஆட்டத்த முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்கோ. இனிக்கி ராமசுப்பு ஐயரோட உபன்யாசம் இருக்கு மிஸ்பண்ணிடாதேள்.  அவர் சொல்லிவிட்டு கடந்துவிட்டார்.
     சாரதா ஒரு பன்னிரண்டும், ஐந்தும், ரெண்டும் போட்டு இரண்டு பாம்புகளைக் கடந்து ஒருவழியாக ஏணியில் ஏறி பாதி தூரம் வந்திருந்தாள்.
     ஒரு தாயம் மூன்று போட்ட சித்ரா பரமபதம் எறிக்கொண்டாள்.
ஒன்னோட கை இங்கே நல்லா விளையாடுதுடீ. என்ன எழவோ ஒனக்கு வாழ்க்கைதான் முட்டிகிட்டு நிக்குது.
     இனி பாம்பினால் வெட்டுப்பட வாய்ப்பில்லை என்று சந்தோசத்தில் இருந்த சித்ராவுக்கு இப்பொழுதுதான் சாரதா தனது வாழ்க்கையை பற்றி சொல்வது சிறிது உரைக்க ஆரம்பித்து முகத்தில் சந்தோசக்களை மாறியது.
     சாரதாவுக்கு என்னதான் நீ பரமபதத்தில ஜெயிச்சாலும் வாழ்கையில நீ ஒடஞ்ச பானைதான என்று குத்திக் காட்டுவதில் ஒரு ஆனந்தம்.
சித்ரா சில தாயங்கள் போட்டு கடைசிக் கட்டத்தை அடைந்திருந்தாள்.
ஓங் கைரசிக்கு அத்தன பாம்புலையும் சிக்காம ஏணியா ஏறிகிட்டு போயி பரமபதத்தைத் தொட்டுட்ட. எனக்குதான் இதுல கொடுத்துவக்கல. சரிடீ எப்போவும் போல நீதாஞ் ஜெயிச்சே. வா எடுத்துவச்சிட்டு கோவிலுக்கு போகலாம்.
     கோவில் களைகட்டியிருந்தது. வண்ண விளக்குகள் சீரியல் பல்புகள் என்றுஏக தடபுடல் இந்தமுறை.  பெருமாளின் பெரியவடிவ உருவம் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் வாசலில் அனைவரையும் வரவேற்றது.  இளைஞர்கள் சிலர் அதன் முன்நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
     சித்ராவை அழைத்துக் கொண்டு சாரதா கோவிலுக்குள்ளே நுழைந்தாள். கோவிலின் முன்னால் இருந்த ஆஞ்சநேயருக்கு வணக்கம் போட்டுவிட்டு நேராக உள்ளே சென்று பெருமாளையும் தாயரையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தவர்கள்  அங்கிருந்த அரசமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு உபன்யாசம் கேட்கத் தொடங்கினர்.
அவர்கள் அருகில் அமர்ந்திருந்த இருவர் தமக்குள் பேசிக் கொண்டனர்.
     என்ன ஒய் எப்பிடி இருக்கான் ஒங்க புள்ளையாண்டான் அமெரிக்காலயே செட்லாயிட்டானாமே. ஒமக்கே மாசமானா அம்பதுரூவா அனுப்பிச்சிடுரான்னு கேள்விப்பட்டேன் எல்லாத்துக்கும் எழுத்து வேணும் ஓய்.
     ஆமாம் ஒய் கொஞ்சம் வாழ்க்கை நிம்மதியா ஓடிண்டிருக்கு.
பாத்தேளா ராமசுப்பு சும்மா பிச்சி ஒதரிட்டாரு இன்னிக்கு.  பெருமாளே மனசு குளிர்ந்து கேட்டுட்டு இருந்துருப்பாரு.  கிருஷ்ணபகவான் பரலோகம் போறதா சொல்றப்ப கண்கலங்கிடுத்து ஓய். பகவானுக்கே இந்தகெதின்னா நாமள்லாம் என்ன ஓய். 
     கவனிச்சேன் அதான் தனக்குன்னு ஒரு அம்ப ஏகலைவனோட அம்பராத்தூளில சொறுகி வச்சிட்டுல வந்துருக்காரு பகவான். சரி அவாளாம் என்ன சொல்லவர்ரா இதுல. பகவானா இருந்தாக் கூட ஒருநாள் கெளம்பிட வேண்டியதுதானா என்ன?.
     அதில்ல ஓய் அவாள்லாம் தேகசித்தி அடஞ்சவுங்க அதனால எதோ ஒருகாரணத்தவச்சி அவாளே லோகவாழ்க்கையை முடிச்சிக்குவாங்க.  நோக்கும் நேக்குந்தான் எமன்,  பகவான் அவாளே எல்லாம் பாத்துண்டுருவார்.  என்று சொல்லிக் கொண்டே உடன் கொண்டுவந்திருந்த பிரசர் மாத்திரையையும் சுகர் மாத்திரையையும் வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தார்.  என்னவோய் பண்றது இன்னிக்கி சாப்பாடு இல்லேனாலும் இதுகள போடாம இருந்தா ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம் அதான் நேரத்துக்கு போட்டுக்கறேன்.
     எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம வைகுண்ட ஏகாதசிக்கு சொர்கவாசல்  வந்துடுறேன். இது எனக்கு அம்பதாவது மொற.  எப்பிடியும் நம்மளை பகவான் அவரோட வைகுந்தத்தில சேத்துண்டுடுவார்னு நம்பிக்கை இருக்கு ஓய் என்ன சொல்றேள்.
     நெசந்தான் ஓய். சொர்க்கவாசல் போறது பாக்கியமில்லையாபின்ன.
அதான் ஒரு நாள்முழுக்க அன்ன ஆகாரமில்லாம கண்முழிச்சு உக்காந்து உபன்யாசம் கேக்கரோமில்ல.  இந்த காலந்தான் ஓய் ரொம்ம முக்கியம் இந்த காலத்துல நாம பகவான நெனச்சிண்டே இருந்தாலே சுவர்க்கம் நிச்சயம். அதுனாலதான் பாத்தேளா ராபூரா நம்மள தூங்கவிடாம கோவில்ல ஏதாவது  நிகழ்சி செஞ்சிண்டே இருப்பா.
     ஒலிபெருக்கியில் எல்லாரும் பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ ஹோமத்தில இப்போ பூர்ணாகுதி ஆகப்போறது என்று சப்தம் கேட்டது. சாரதா சித்ராவைப் பார்த்தாள். சித்ராவுக்கு அக்கா என்ன சொல்லப் போகின்றாள் என்று புரிந்துவிட்டது.  அரசமரத்திலிருந்து எழுந்து யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி வந்து மண்டபத்தில் வந்து அமர்ந்துகொண்டனர்.
காலை மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. முழிக்க முழிக்க அனைத்து நிகழ்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மண்டபத்திலேயே தூங்கிவிட்டிருந்தனர். சுவர்க்க வாசல் திறப்பதற்கு  ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்து. வாழைமரம் தென்னங்குருத்து மலர் மாலைகள் என்று சொர்கவாசல்  அமர்க்களமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
மக்கள் இப்போதே எழுந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் நேற்று இரவே வந்து சொர்கவாசலுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருந்தனர். காலையில் திறந்தவுடன் முதல்ஆளாக நுழைந்து வெளிவந்து வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்பது அவர்களது நோக்கம்.
ஒருபக்கம் அர்ச்சகர்கள் உற்சவரைத் தாயார்களுடன் ஒரு பல்லகில் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரம்தான்.
கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. முதலில் யார் சுவர்கவாசல் வழியாக முதலில் செல்வது வொவ்வொருவர் மனதிலும் ஒரு உந்துதல் எப்படியாவது முதலில் சென்றுவிடவேண்டுமென்று. வரிசை எல்லாம் இப்பொழுது அமைதியாக இருக்கும் வாசல் திறந்தவுடன் எல்லோரும் மொத்தமாக சென்று முட்டிக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் நுழைந்து பிதுங்கி வெளிவருவதற்குள் போதுமென்று ஆகிவிடும்.
     சித்ராவுக்கு சொர்கவாசல் இதுதான் முதல் முறை.
அவர்களுக்கு பின்னால் உறங்கிக்கொண்டிருந்த  ஐயர் ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருந்தார். அந்த மண்டபம் முழுவதும் அலறியது. உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர். உறங்குபவர்களை எழுப்புவதற்கென்றே ஒருகோவில் பணியாள் இரவு முழுவதுவும் ஒரு லத்தியை கையில் வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டிருப்பான். மூன்றுமணிக்கே அவனது சப்தமும்அடங்கிக் கோவில் வாசலில்உள்ளத் தூணில் சாய்ந்து அவனும் உறங்கிக் கொண்டிருந்தான். சன்னதி மட்டும் திறந்திருந்து அர்ச்சகர்கள் இரவு முழுவதுவும் சிப்ட் போட்டு விழித்திருந்தனர்.
     சன்னதியில் ஆரத்தி ஆகிக்கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் வாசல் திறந்துவிடும். இரவே வந்து வாசல்முன் படுத்துக்கிடந்த முரட்டு ஆசாமிகள் எழுந்து நின்று புத்திசாலித்தனமாக தமக்குள்ளே ஒரு சங்கிலி போல அமைத்துக் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்துவதுபோல யாரையும் தம்மைத் தாண்டி அனுமதிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்பாடோடு வைத்துக்கொண்டிருந்தனர்.
     சிட்டில இருக்குற பெரிய கோவில்னா இந்நேரம் பத்து போலிஸ்காரங்க வந்திருப்பாங்க. இங்கே  இந்த மஸ்கோத்து பசங்கதான் போலீசு. அல்லாரையும் தடுத்துட்டு மொதஆளா அவனுங்கதான் வாசல்ல பூருவானுங்க.  ஐயரே கொஞ்சம் நாம மெதுவாத்தான போகலாம். இந்தக் கூட்ட நெரிசல்ல சிக்கி ஒடம்புக்கு எதன்னா ஒண்ணுகிடக்கஒண்ணு ஆகிடப் போகுது.
     அவர்கள் இன்னும் சித்ரா சாரதாவிற்கு பின்னால்தான் வரிசையில் நின்றிருந்தனர்.
     சித்ரா வாசலை மறித்துக் கொண்டிருக்கும் அந்த முரட்டுக் கூட்டத்தைப் பார்த்து அதில் யார் முதலில் நுழைந்து வெற்றியடைவார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்.   முதலில் யார் நுழைந்து வெளியில் வந்தார்கள் என்கின்ற பெருமை அடுத்த வருடம்வரை அந்த ஊரில் பெருமையாகப் பேசப்படும்.
     கூடியிருந்த கூட்டம்தான் சொர்கவாசல் நுழையப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த சித்ராவுக்கு சிறிய அதிர்ச்சி வரிசையில் முதல் ஆளாக அலங்கரித்துக்கொண்டு பெருமாள் துணைவியாருடன் வந்து  நின்றுகொண்டார். ஐயர் சொர்கவாசலை சாவிபோட்டு திறந்தவுடன் சுவாமியின் பல்லக்கு கோவிந்தா கோசத்துடன் முதலில் நுழைந்து வெளியேறிப் போனது.
     என்ன ஓய் பார்த்தேளா பெருமாள்ன்னா மொதல்ல நொழஞ்சி வெளியே போறாரு.
ஆமா ஓய் நம்மளுக்கு  சொர்கத்துக்கு வழி தெரியாமத்தான தவிச்சிட்டுருக்கோம் அவருன்னா வந்து கைட்பண்றாரு.
 பொறவு சொர்கத்துக்கு சாவி அவாதான வெச்சிருக்கா அப்ப அவரு இல்லாம கதவ எப்புடித்தொறக்க முடியும். 
அந்த தடிப்பசங்க மூஞ்சிய பாத்தீங்களா நான்தான் மொதல்லன்னு முண்டிக்கிட்டு நின்னானுங்க. பெருமாள் வந்தோடனே அப்பிடியே செவத்திலே பல்லிமாதிரி ஒட்டிகிட்டானுங்க. மொதல்ல வெளியபோனா என்ன கவர்னர் பட்டமா குடுக்கப் போறானுங்க போக்கத்தவனுங்க.
     பெருமாள் வழிகாட்டக் கூட்டம் முந்திக் கொண்டு சொர்க்க வாசல் வழியாகச் செல்ல ஆரம்பித்தது.
    சித்ராவுக்கு ஒரே கிளர்ச்சி முதல் முறையாக சொர்கவாசல் நுழைகின்றோம் எப்படி இருக்குமோ என்று. வேறு எதற்காகவும் இப்படி இரவு முழுவதும் கண்விழித்து அவள் காத்திருந்ததில்லை இதுவரை.   வாழ்கையில் இனிமேலாவது பெருமாள் நமக்கு கண்கொண்டு பார்ப்பார் என்று மனம் குதூகலித்தது.
     சித்ராவும் சாரதாவும் கூட்டத்தில் கலைந்து பிரிந்துவிடாமல் இருக்க ஒருவர்கையை ஒருவர் பற்றிக்கொண்டனர்.
      இரவு நீங்கி வானம் வெளுத்திருந்தது சூரியன் இன்னும் எழவில்லை.
கோவிந்தா கோசம் விண்ணை முட்டிக் கொண்டிருந்தது.
     சொர்க்கவாசல் வழியாக நுழைந்து வெளியே வந்தனர் சித்ராவும் சாரதாவும்.
      எதிரே பூட்டிக்கிடந்த ஒரு பாழடைந்த தாசிவீட்டின் முன்னால் இருந்த டீக்கடையில் முதலில் நுழைந்து வெளிவந்திருந்த அந்தக் கூட்டம் தூக்கக் கலக்கத்துடன் டீ குடித்துக் கொண்டிருந்தது. கடையினருகே  டீக்கடைக்கு கீழே சாக்கடை கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  இரண்டு நாய்கள் அதில் விழுந்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தெருவில் பெண்கள் மார்கழி மாத கோலம் போட்டுக் கொண்டு அவரவர்கள் வாசலை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
     சித்ராவின் மனதில் சொர்கவாசல் பற்றி இருந்த அத்தனைக் கற்பனைகளும் பட்டுப்போயின.  என்ன இது மீண்டும் அதே இடத்திற்கு அதேவாழ்கைக்குத் தானே திரும்பவருகின்றோம் என்று பொசுக்கென்றிருந்தது.  இனிமேல் ஒருவேளை இதில் ஏதும் மாற்றம் நடக்குமா என்று மனம் ஏங்கிக் குழம்பிக் கொண்டிருந்தது. வயிறு பசிக்க ஆரம்பித்தது.  பின்னால் திரும்பிப் பார்க்க முட்டிக்கொண்டும் பிதுங்கிக்கொண்டும் பலர் சொர்கவாசல் வழியாக வெளியேறி வந்துகொண்டிருந்தனர். மாமி கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ யாருன்னா தள்ளி விட்டுடுவா என்ற சப்தம் கேட்டு சாரதாவின் கையைப் பிடித்துத்தள்ளிக் கொண்டு வெளியேறுபவர்கள் செல்ல வழிவிட்டுநின்றாள்
     தூரத்தில் சென்ற சுவாமியின் பல்லக்கு கோவிலைச் சுற்றிக்கொண்டு மீண்டும் கோவிலுக்குள்ளே சென்றுகொண்டிருந்தது.  
####  நலம்  #####
எழுத்தாக்கம்
RAVIKUMAR P


PH:  7904313077, 9841189033

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

வேட்டை

 அந்த மொட்டைச் சுவருக்குள்   அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களுக்கு நடுவே காட்டுப்பூச்சியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “டே...