அந்த மொட்டைச் சுவருக்குள் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களுக்கு
நடுவே காட்டுப்பூச்சியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “டேய் யாரு
வந்துருக்குறது தெரியுமில்லே” என்று கண்கள் சிவக்க, புருவங்கள் கிராமத்துச் சுதை
சிற்பத்தின் முகத்தில் உள்ளதுபோல நெற்றியில் ஏறிவளைந்திருந்தது. அவன் கையில்
பிடித்திருந்த பிளாஸ்டிக் டம்ப்ளர் சரசரவென நசுங்கிக்கொண்டு தனது எரிச்சலை உதிர்த்துக்கொண்டிருந்தது.
நசுங்கிய பக்கம் சிந்தத் துடிக்கும் ஆனந்த பானத்தை வழிந்துவிடாமல் லாவகமாகப்
பிடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும், அதன் எரிச்சலைக்
கூட்டிக்கொண்டே அதை உறிஞ்சிக்கொண்டிருந்தான் காட்டுப்பூச்சி. அருகே
டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட இரண்டு ஆப்களும் இரண்டு குவாட்டர்களும்
தலைதிருக்கப்பட்டு இறந்து கிடந்தன. அதனுள்ளிருந்த ஜீவரசம்தான் மாடனுக்குள் சென்று
அவனை இப்பொழுது இந்த உலகிற்கே ராஜாவாகவும், தெய்வமாகவும்
ஆக்கியிருந்தது. வலதுகையில் வீரவாள் போல ஏந்திக்கொண்டிருந்த அந்த லெக்பீசையே அவன்
காலின் கீழே படுத்திருந்த கருப்பு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. இவன் இன்னும்
பாதிதான் தின்றிருக்கின்றான் மீதி முடிந்தவுடன் நமக்கு வந்துசேரும் என்று நாவில் நீர்வழிய
அவனது வலது புறமாக படுத்துக்கொண்டு மாடனையே பார்த்துக்கொண்டிருந்தது.
மாடன் என்னும் அழகான பெயர் இருந்தும் மொத்த கிராமமே அவனை காட்டுப்பூச்சி என்றே
அன்புடன் அழைக்கும். உண்மையில் அவன் தாய் அவனது சிறுவயதில் துவங்கிவைத்ததையே
மக்களும் பின் பற்றிக் கொண்டனர். அவனது குரல் காட்டில் ஒலிக்கும் சில்வண்டின்
சப்தம் போல் தொனிப்பதாலும், எந்நேரமும் கட்டுக்குள்ளேயே திரிந்துவிட்டு சாப்பாட்டிற்கு மட்டும்
வீட்டிற்கு வந்து தலைகாட்டுவதால் அவன் தாய்
அவனுக்கு வைத்த பெயரே கட்டுப்பூச்சி.
அந்த வேடைக்குழு அமர்ந்திருந்த பாழடைந்த அந்த மண் வீட்டின்
மொட்டை சுவற்றிற்கு மறுபக்கம் கிராமத்து மக்கள்
மலம் கழிக்க ஒதுங்கும் இடம். ஆனால், எதைப்பற்றியும்
கவலைப்படாமல் தமக்கென்று ஒரு சொர்கலோகத்தை அங்கே உருவாக்கி வைத்திருந்தது அந்த வேட்டைக்
குழு. ஆனந்த பானம் பருகும் சமயம் போக, அங்கே ராஜா,ராணி, மந்திரி, கழுதை சீட்டுகளின் ஆக்கிரமிப்பிலேயே
நாட்கள் நகரும். டிரம்ப்பின் செயல்களிலிருந்து, மன்மோகன் சிங்கின்
தவறுகளோடு மோடியின் செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதுவரை அனைத்தும் நடந்தேரும்
அரசவை அதுதான். அதற்கு மாடன்தான் ராஜா.
அங்கிருப்பவர்களை யாராவது என்னடா படிச்சிருக்கே
என்று கேட்டால் கொலைக் குற்றம் செய்ததுபோல விழிகள் சிவந்துகொண்டு “ம்”
ராமாயணம், மகாபாரதம், வேர்ல்டு இஸ்டிரி,
ஜியாகிரபின்னு நெறைய படிச்சிருக்கோம். ஒன்
சோலிய பாத்துட்டு போவியா, என்று பதில் வரும். அந்த வேட்டைக் கூட்டம்
அமர்ந்திருந்தால் ஊர்மக்கள் அவர்களை கடந்து செல்லாமல் சற்று தூரத்தில் மரங்களிடையே
சுற்றிக்கொண்டே சென்று அவர்கள் பார்வைபாடாமல்
தம்மைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
மொட்டை சுவற்றில் இடிந்து விழுந்திருந்த சில சதுர செவ்வக
வடிவ மண் பாளங்களை காட்டுப்பூச்சி அமருவதற்கு சிம்மாசனம் போல அமைத்துக் கொடுத்திருந்தது
வேட்டைக் குழு. மற்றொரு பக்கம் அதேபோல உடைந்துகிடந்த சிறிய மண்பாளங்களை எடுத்து
அடுக்கி பெட்டியைபோலச் செய்து அதில் எண்ணைக்காகிதம் சுற்றப்பட்ட சீட்டுக்கட்டு ஒன்று
உறங்கிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு அற்புதமான கட்டமைப்பை செய்து சீட்டுக்கட்டுகள்
எப்படிப்பட்ட மழையிலும் நனையாமல் பாதுகாப்பாக
செய்துவைத்த சுடலை குழுவால் ஒருமுறை லேக்பீஸ் கொடுத்து கெளரவிக்கப்பட்டான்
குழுவினர் அனைவரும் ஆனந்த பானத்தின் உபயத்தால் சிவந்து
உருளுகின்ற தலைவரின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும்
தலைவரல்லவா. கட்டுப்பூச்சி கண்களை சிமிட்டிக்கொண்டே ஹா என்று சப்தமிட்டுக்கொண்டான்.
போதை ஏறிவிட்டதை அறிவிக்கும் விதமாக
கையிலிருந்த அந்த பிளாஸ்டிக் டம்ளரை உருகுலைத்து கசக்கி குட்டிச்சுவற்றின்
மறுபக்கம் எறிந்தான்.
குழு உஷாராக நிமிர்ந்து அமர்ந்தது. இதுபோல சைகைகள் வந்தால் காட்டுபூச்சி குறி சொல்ல
ஆரம்பித்துவிடுவான்.
டேய் சொம்பு, சொன்னேனேடா மச்சானுக்கு சின்னவயசுலருந்தே சுடலகருப்பு வந்து எறங்கும்டா.
அப்பவே இவரு குறிசொல்லுவாரு கேட்டுருக்குறியா என்று மது அருந்திக் கொண்டிருந்த
அந்த சிறிய குழு தனது போதையையும் பொறுட்படுத்தாது, இடுப்பில்
சுற்றியிருந்த டவலை எடுத்து முகம் துடைத்துக்கொண்டு மீண்டும் மரியாதையுடன் இடுப்பில்
கட்டிக்கொண்டு தாள்ளாடியபடியே எழுந்து மரியாதையாக
நின்றுகொண்டது.
சொல்லு சாமி, சொல்லு நாங்க எதுனாசும் தப்பு
பண்ணியிருந்தா மன்னிச்சுக்கோங்க. எங்க வேட்டையில
எதுவும் கொறை வெச்சிடாத. எந்த ஆபத்து வந்தாலும் நீதான் வந்து எங்களை
காப்பாத்தணும். காலங்காலமா நீ செஞ்சிக்கிட்டு வந்த இந்த வேட்டைய ஏதோ எங்களாள
முடிஞ்ச அளவுக்கு கன்ட்டிநியூ பண்ணிக்கிடு இருக்கோம். எல்லாம் ஒன்னோட ஆசீர்வாதம் தான் சாமி.
குழுவின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்த சாமி பெரிய சிரிப்பை
உதிர்த்தது.
நீங்கல்லாம் என்னோட கொழந்தைங்கடா ஓங்கள நான்
கைவிட்டுடுவேனா. ஒங் எல்லாருக்கும் என்னோட
ஆசீர்வாதம் எனிக்கும் உண்டுடா. இன்னிக்கு
புதுசா ஒரு கொழந்தைய ஒங்க க்ரூப்புக்கு அனுப்பிவெச்சேன் ஆவன சேத்துக்கங்கடா. அவன்
ரொம்ப நல்லவண்டா.
சாரிசாமி, சரிசாமி என்று கன்னத்தில் போட்டுக்கொண்டே அனைவரும் பச்சமலையின் பக்கம்
திரும்பினார்.
டேய் ஒன்னத்தாண்டா சாமி சொல்லுது, கண்ணத்துல
போட்டுகிட்டு கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோடா.
விழித்துக்கொண்டு நின்றிருந்த பாசமாலை என்னும் பச்சை, காட்டுப்பூச்சியின் கால்களில் விழுந்து
ஆசிவாங்கிக்கொள்ள, அனைவரும் அவனை மனதார தமது கூட்டத்தில்
ஒருவனாக அங்கீகரித்துக்கொண்டனர்.
சுடலை வாய்திறந்தான், சாமீ நாங்க எதுன்னாச்சும் தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுசாமி. கோவிச்சுக்கிட்டு எங்கள போட்டுப் பாத்துராத.
வேட்டைக்கு போரப்ப நீதான் எங்களுக்கு தொணை. என்று வணங்கி நின்றான்.
உஷ் உஷ், புர்புர் என்று மூச்சுவாங்க மீண்டும் காட்டுப்பூச்சியின் குரல் உரத்து
ஒலித்தது. குண்டுமுத்து தலைவர் கீழே
விழுந்துவிடாமல் ஆதரவாக அருகில் சென்று தோளைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டான்.
செய்யுரேண்டா புள்ளைங்களா, அதுக்குத்தானடா வந்துருக்கேன். நீங்க எதுவும் தப்பு பண்ணலடா நல்லது தாண்டா
செஞ்சிருக்குறீங்க. ஆனா, எல்லாதையும் பாதி பாதியாத்தானடா செய்யுறீங்க.
என்ன சாமி அப்பிடி சொல்லிப்புட்டீங்க? அப்பிடி என்ன கொறை வச்சோம்
ஒனக்கு.
சைட் டிஷ் எதுவும் இல்லையேடா, வெறும் சோமபானத்தை கொண்டுவந்து
படைச்சிருக்குறீங்களேடா,
என்னோட பக்தன் இதக் குடிச்சிட்டு கொடலு வெந்து சாகுறதுக்கா. ஊய் ஹம் ஹம்
டுடு டு டு. என்று சிவந்த கண்கள் விரிய
காட்டுப்பூச்சி கத்தியதைக்கண்டு குழு சிறிது வெலவெலத்துத்தான் போனது. அவன் செத்தான்னா
ஒங்க யாரையும் நான் உசிரோட விடமாட்டேன்.
எல்லாரும் ரத்தங்கக்கி சாவீங்கடா. மொத்த
வேட்டைக்குழுவின் முகம் வெளிறியது.
குழுவில் புதிதாக இணைந்திருந்த பச்சமலை குண்டுமுத்துவிடம் கிசுகிசுத்தான். டேய் குண்டு, என்னடா சாமியாடா இப்பிடி வந்து பேசுது.
நான் பாத்ததில்லடா.
அமாண்டா பச்சை, இதுதான் சுடலைக்கறுப்பு சாமி நம்ம கொளத்தாண்ட ஒரு கோட்டை சொவாறு வெச்ச
கோயிலு இருக்குல்ல, அதான் வருசா வருஷம் திருவிழா
கொண்டாடுரோமில்ல குதிரை எடுத்து, அந்த சாமிதாந்த இப்ப தலைவரு
மேல வந்து ஏறங்கி இருக்கு.
பாத்தியா சாமிகூட ராவாகுடிச்சா
கொடலு வெந்து குந்தாணி கவுந்துருமுன்னு தெரிஞ்சி வச்சிக்கிட்டுத் அதோட பக்தன
காப்பாத்துதுடா அதுதாண்டா சாமி நம்ம மேல காட்டுற அன்பு.
அடுத்த வாட்டி ரெண்டு வாட்டரு பாக்கெட்டு ரெண்டு மிச்சறு சேத்து
வாங்கிட்டு வரணும்டா. இந்த சாமிதாண்டா வேட்டைக்கு
போரப்ப நமக்கெல்லாம் பாதுகாப்பு. தப்பா
எதுவும் கேள்வி கேட்டுப்புடாதடா. ஒரே ஒரு
லெக் பீஸ் தானடா வங்கியாந்தீங்க. அதுவும் சாமிக்கே படைச்சாச்சி. ரெண்டு மிச்சரு
பாக்கெட்டு கொஞ்சம் சிப்ஸு வாங்கிருக்கலாமுலெடா.
நம்மள்ளாம் ஊருகாய நாக்கிடு வேலைய முடிச்சிட்டோம் சாமி மிச்சரு கேக்குது. விருந்து வெச்சா முழுசா வெக்கணும்டா. இப்பிடியா
அரைகொறையா வப்பாங்க. சரி விடு சாமி அதெல்லாம் பெருசுபடுத்தாது. மன்னிச்சிடும். இவ்வளவு செலவு செய்தது வீணாகப் போய்விடுமோ
இவர்கள் தன்னை கூட்டத்திற்குள் சேர்ப்பார்களா மாட்டார்களா? மிச்சர் குறைந்துபோனதை
காரணம் காட்டி ஒடுடா இந்தப் பக்கம் வராதே என்று விரட்டிவிடுவார்களா. பச்சையின் மனம் சற்று குழப்பத்துடன்
சமாதானமானது.
மொந்தைவயலு கிராமத்தில், வீட்டிலேயே அடைந்து கிடந்துவிட்டு, வாழ்கையில் உலகின் வேறு பல பரிமாணங்களையும் தரிசிக்கும் ஆசையில் அந்த
கூட்டத்துடன் வந்து இணைந்திருந்தான் பச்சைமலை. இன்று நடந்துகொண்டிருக்கும்
விருந்தின் செலவு அவனுடையது. அதுவே அவனை அந்தக் கூட்டம் தனக்குள் ஏற்றுக்கொண்டதற்கான
அடையாளம்.
மீண்டும் ஏதோ மனதில் தோன்றியவனாக பச்சைமலை டேய் இது சாமியா, இல்லை ஒங்க மச்சான் எக்ஸ்ட்ரா
கட்டிங் போடுறதுக்காக நடிக்கிறானாடா?
பச்சை ஒனக்கு ஏண்டா சந்தேகம். அவுரு எங்க கூட்டத்தோட
தலைவருடா. நீ இனிக்கு செலவு பண்றதால ரொம்ப யோசிக்கிற போலருக்கு.
பச்சை சிறிது சமாளித்துக்கொண்டு இல்லடா அப்புடி இல்ல, பேசுரதப் பாத்தா சாமி பேசுறதுபோல இல்ல.
கண்ணுமுழி பூரா குவாட்டரு மேலேயும் மிச்சரு மேலேயுந்தான் இருக்குதுடா அதான். அப்புறம், இந்த
மாதிரி பீக்காட்டுல எல்லாம் சாமி வந்து
சொல்லுமாடா.
ஏண்டா சொல்லாது நாங்க வேட்டைக்கு போறப்ப தலைவருமேல சாமி
வந்து எந்தபக்கம் போனா வேட்டை கெடைக்கும்னு கரக்டா சொல்லிடும் தெரியுமா. நீ இப்பத்தான எங்களோட கூட்டு சேந்துருக்க போகப்
போக எல்லாம் பாத்து தெரிஞ்சுக்குவடா.
எங்கே தன்னை கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுவார்களோ
என்னும் பயத்தில், டேய் குண்டு, நீ ஒண்ணும் நெனச்சிக்காத, நான் சொன்னத தலைவருகிட்ட சொல்லிடாதடா, என்று
சமாதானம் செய்துகொண்டான் பச்சை
புதிதாக ஒரு ஸ்பான்சர்
வந்திருக்க கூட்டம் அதை இழக்கத் துணியுமா என்ன?
சரிடா குண்டு ஒங்க மச்சானுக்கு ஏண்டா காட்டுப்பூச்சின்னு பேரு
வச்சாங்க.
அதுவா, சின்ன வயசுல சிள்வண்டு மாதிரி எப்பவும் கத்திக்கிட்டே அழுதுகிட்டு
இருப்பராம். வீட்டுல இருக்குறவங்க காதெல்லாம் கிழியரமாதிரி கத்திக்கிட்டே
இருப்பானாம் அதுனால அப்பிடி பேரு வச்சிட்டாங்க. அதுக்கென்ன நல்லாத்தானடா இருக்கு
பேரு. சின்ன வயசுல இருந்தே காட்டுக்குள்ளதான் சுத்திக்கிட்டே இருப்பாராம். அவர
விட்டா இங்கே சுத்தியிருக்குற பத்து ஊருல வேட்டைக்கு போரவுங்க, வேட்டையோட நுணுக்கம் தெரிஞ்சவுங்க வேற யாரு இருக்கா
சொல்லு. நம்ம வேட்டை டீமோட தலைவரு பேருலயே
காடுன்னு வச்சிருக்குறது ஒனக்கு ஒரு ஒத்துமையா தெரியலை? நீ
அவரு வீட்டுல போயி பாத்துருக்குறியா எத்தனை மான் தலை கரடி தலை இருக்குது
தெரியுமா. இந்த எரியாவுலயே அப்பிடி நீ
பாக்க முடியாது தெரியுமா?
பச்சை குண்டுமுத்து கூறியதை ஏற்றுக்கொள்ளும் விதமாக சிறிய
புன்முறுவலை உதிர்த்தான்.
இவர்கள் உரையாடிக்கொண்டிருப்பதை கவனித்த பாட்டுப்பூச்சி, என்னடா குண்டுமுத்து
புதுசா வந்தவன் ஏதாவது பொலம்புறானா சொல்லு?
இல்ல சாமி அவன் கூட்டத்துக்கு புதுசு அதுனால நான் நம்மளோட ரூல்ஸ
எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.
“ம்” நல்லா சொல்லிக்குடு, என்று கூறிவிட்டு போதை ஏறிய காட்டுப்பூச்சியின்
தலை தனது பலமிழந்து சாய்ந்து ஒருபக்கமாகத் தொங்கிக்கொண்டது.
டேய் பச்சமல, வேட்டைன்னா சாதாரணமில்லடா. அந்த சொரணை ரத்தத்துலயே ஊறி இருக்கணும்டா, நம்ம தலைவரு மாதிரி. சின்னச்சின்ன நுணுக்கமெல்லாம் எங்களுக்கு அப்பா ஆத்தா மாதிரி அவருதான் கத்துக்கொடுத்தாரு
வேட்டையை பத்தி. பத்துவருசமா இந்த குரூப்பு ஏத்தினிதரம்
வேட்டைக்கு போயிட்டு வந்துருக்கு தெரியுமாடா.
ஏத்தினி பேர அவரு பாம்புக்கடியில இருந்து காப்பத்தி இருக்காரு
தெரியுமாடா.
காட்டுப்பூச்சி எழுந்து தாள்ளாடியபடியே அந்த
மொட்டைச்சுவற்றின் மறுபக்கம் சென்றான். உடலில் வடிகட்டப்பட்டு தேங்கிக்கொண்டு சிரமம்
கொடுத்துக் கொண்டிருந்த சோமபானத்தின் பகுதியை உடலிலிருந்து வெளியேற்றிவிட்டு
ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்து மீண்டும் தனது அரியாசனத்தில் அமர்ந்தான்.
சாமி பாரத்த எல்லாம் ஏறக்கிட்டு வந்துருச்சிடா.
ரத்தத்தில் ஆனந்த பானத்தின் ஆதிக்கம் குறைந்ததால் தலை
நிமிர்ந்து நின்றது. பார்வை தெளிவாகியது காட்டுப்பூச்சிக்கு.
டேய் கொய்யாப்புளி, போயி அந்த வலைய எடுத்துட்டு வாடா
என்று உத்தரவு பிறந்தது.
டேய் பச்ச ட்ரைனிங்
ஆரம்பிக்க போகுதுடா. நீ புதுசா
வந்துருக்கல்ல அதுனால எந்த எந்த ஆயுதத்த எப்பிடி உபயோகிக்கணும்னு ஒரு ரிகர்சல்
செய்து காட்டும்டா சாமி.
வேல்கம்பு, கொக்கி குச்சி,
வலை, மண்வெட்டி, கடப்பாரை, கவண் என்று அனைத்து படைகலங்களும் வந்து இறங்கியது காட்டுப்போசியின்
முன்னால். அவன் குரல் உரத்து ஒலித்தது. டேய்
அவவனுக்குரியத எடுத்துக்கோங்க, புதுசா வந்துருக்குற
பாசமாலைக்கு இனிக்கு வேட்டை செய்துகாட்டணும் அப்பதான் அவனுக்கு தெகிரியம் வரும்.
டேய் குண்டுமுத்து கடப்பாரை மண்வெட்டி எல்லாம் எதுக்குடா
வேட்டைக்கு.
பச்சை ஒண்ணும் பேசாத கவனி வேட்டைக்கு போரப்ப எல்லாம்
புரியும். ஒனக்கு.
அனைவரும் தமது ஆயுதங்களைத் தேடி எடுத்துக்கொள்ள அருகிலிருக்கும்
பாறைநடுவே இருந்த பொந்தின் முன்னால் வேட்டை
நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.
ஒருவன் புலியைப் போல உறுமிக்கொண்டு குழியின் முன் நிற்க, அவனை பிடிப்பது போல இருவர்
வலையை விரித்துக்கொண்டு அதை பிடிக்க முயற்சி செய்ய, ஒருவன்
ஈட்டியை கொண்டு அதன் வயிற்றில் குத்துவதுபோல பாவனை செய்ய, மற்றொருவன்
மூங்கில் கம்பின் நுனியில் வயர் கம்பியை சுற்றி கழுத்து நுழையும் அளவுக்கு வட்டமாக
சுருக்குகுபோட்டு வைத்திருந்த அந்த கொம்பை எடுத்து வந்து புளியாக நடித குண்டுவின் கழுத்தில் போட்டு
இழுத்து, இப்படி செய்யவேண்டும் என்று நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. கழுத்தில்
சுருக்கு விழுந்தவுடன் வலையுடன் இணைந்து புலியை அனைவரும் அமுக்கிக்கொண்டு அதன்
கால்களை கட்ட ஆரம்பித்தனர்.
டேய் மவனே இன்னும் கொஞ்சம் இறுக்கி புடிச்சிருந்தாலும்
என்னோட தொண்டைக்குழி நசுங்கி இருக்கும்டா. என்று இருமிக்கொண்டே கழுத்தில்
மாட்டியிருந்த சுருக்குக் கம்பியை விடுவித்து எடுத்து சுடலையிடம் கொடுத்தான் குண்டுமுத்து.
பச்சமலை நல்லா பாத்துக்கிட்டியா, இது சும்மா ஒனக்காக தலைவரு இங்கே செஞ்சி
காட்டுராறு. நைட்டு காட்டுக்குள்ளார போரப்ப ஒனக்கு யூஸ்புல்லா இருக்கும். புலின்னாலும், பண்ணின்னாலும் மானுன்னாலும், ஒரே மாதிரிதான்
அட்டாக் பண்ணனும். புரியுதா.
பச்சை புரிந்த மாதிரி தலையாட்டிக்கொண்டான்.
தனக்காக ஒரு சிறிய
வேட்டை நாடகம் நேரில் அதில் கலந்து கொள்வதைப்போலவே நடித்துக் காட்டப்பட்டது கண்டு
பச்சமலையின் கண்கள் விரிந்து முகம் மலர்ந்தது. புலி வந்தால் எப்படி இருக்கும் மான் வந்தால்
எப்படி இருக்கும் என்று அவனுக்குள்ளே கற்பனைகள் ஓடி மறைந்துகொண்டிருந்தன.
சரிடா போயி எவனாவது கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்கடா
என்று கூறிவிட்டு வியர்க்க வியர்க்க காட்டுப்பூச்சி, தனது அரியாசனத்தில் மீண்டும் வந்து
அமர்ந்தான்.
சொங்காணி என்னும் செந்தூர்பாண்டி அருகில் கிடந்த வாட்டர்
பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதன் நசுங்கலை செரிசெய்துகொண்டே தண்ணீர்
எடுத்துவர, ஊருக்குள் விரைந்துகொண்டிருந்தான்.
சொடல, அவன் போயிட்டு வரட்டும் நீ அந்த பொட்டியில இருக்குற நம்ம ராஜாராணிய எடுடா.
சுடலைவிரைந்து சென்று மொட்டைச்சுவற்றின் மற்றொரு
மூலையிலிருந்த மண் பாளத்திற்குள் கைவிட்டு, எண்ணைக் காகிதத்தில்
சுற்றப்பட்டிருந்த அந்த சீட்டுப் பொதியை எடுத்துவந்து சபையில் வைத்தான்.
கிழிந்த பாய் ஒன்று சபையில் விரிக்கப்பட்டு அதன்மீது
கிழிந்த சமுக்காளமும் விரிக்கப்பட்டது.
டேய் சொடல பாருடா இந்த பாயி, சமுக்காளம் ரொம்ப இத்துப்போச்சிடா பெரியவூட்டு பக்கமா
போரப்ப, அந்த பாட்டிக்கிட்ட கேட்டு ஏதாவது பழசு தேறும்னா வாங்கிட்டு வாடா.
சரி மாமா.
ராஜா, ராணி, ஜாக்கி, கழுதை அனைத்தும் சிதறிக் கலைந்து,
மீண்டும் ஒன்று சேர்ந்து கலைக்கப்பட்டு குழுவின் விரல்களில் சென்று விரிந்து
நின்றது.
என்ன மாமா என்ன
பெட்டு இன்னிக்கி.
வழக்கம்
போல தோக்குறவன் டீ வாங்கித் தரணும் அவ்வளவுதான் மச்சான். அதான்
காலையிலயே தீர்த்தமெல்லாம் ஆயிடுச்சில்லே.
அனைவரின்
முகத்திலும் புன்னகை தவழ ராஜாவும், ராணியும்
விரல்களிலிருந்து சமுக்காளத்தின்மீது மீண்டும் சரசரவென்று ஒவ்வொருவராக வீச ஆரம்பித்தனர்.
டேய் பச்ச இங்க வாடா, இந்தா பாரு இப்பிடிப் பிடிக்கணும் சீட்ட என்று சுடலை பச்சமலைக்கு
செய்துகாட்டினான். இது பதினொன்னு பன்ணெண்டு இது பதிமூணு புரியுதா. பச்சை புரிந்த
மாதிரி தலையாட்டிக் கொண்டான். ஆனா இவுங்க
மூணுபேரையும் விட இந்த கழுதை தான் பெரிசு புரியுதா என்று பெரிதாகச் சிரித்தான்.
குழுவும் சேர்ந்துகொண்டு உரக்கச் சிரித்தது.
லெக்பீசை சுவைத்து கடித்து விழுங்கிவிட்டு துவண்டு
படுத்திருந்த கருப்பு எழுந்து விளித்துப் பார்த்துவிட்டு மீண்டும் தனது
உறக்கத்தைத் தொடர்ந்தது.
தண்ணீர் எடுத்துவந்த
செந்தூர்பாண்டியும் அங்கே துவங்கியிருந்த ராஜாராணி சோதியில் தன்னை ஐக்கியம்
செய்துகொண்டான்.
தலைவர் தனது
கையிலிருந்த கழுதையை சமுக்காளத்தில் எறிந்துவிட்டு குழுவைபார்த்தார். யாருடா
இனிக்கு சாப்பாடு, யாருடா கொழம்பு கொண்டுவர்றது வேட்டைக்கு?
மாமா பச்சை இனிக்கு சோத்து மூட்டை கொண்டுவாரான். சொங்காணிவீட்டுல இனிக்கு மீன் கொழம்பு எடுத்து வெச்சிருக்கனாம். வேற எதுவும் வேணுமா. சரக்கு இருந்தா நல்லா
இருக்கும். அதான் காலையிலயே அடிச்சிட்டோமே.
ஒரு குவாட்டரு அறுபது ரூவா எழுவது ரூவா ஆக்கிப்பிட்டனுங்க
தேவடியா பசங்க. இவனுங்களுக்கு
அடுத்தவாட்டி ஓட்டு போடக்கோடாது மச்சான்.
ஆமாண்டா சொடல, ஒரு குடிமகனோட உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டு சலுகை பண்ணாத கெவுறுமெண்டு
இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன. மொதலாளிங்களுக்கு
அள்ளி அள்ளி குடுக்குற லோனு தள்ளுபடியில, ஒரு சின்ன துளி
வேட்டைக்காரங்களுக்கும் குடுக்கலமில்ல. நாங்க என்ன பெரிசா கேக்குறோம். அறுவது ரூவா
இருக்குற குவாட்டர நாப்பது நாப்பத்தஞ்சிக்கு குடுக்கலாமில்ல.
மந்திரிங்களே சட்டம் போடுரானுங்க, அவனே சாராய
பாக்டரியும் வெச்சிருக்கான், அவனே டாஸ்மாக் கடையையும் ஏலம் எடுத்துக்குறான்.
அப்புறம் எங்கேருந்து வெலை கொறையுறது. எல்லாம் நம்ம தலைவிதி மச்சான். அடுத்த
சென்மம்னு ஒண்ணு இருந்தா நானு மந்திரியா பொறப்பேன் மச்சான்.
குழுவே இணைந்துகொண்டு உரக்க சிரிக்க, வழிதெரியாமல் அந்தப்
பக்கம்வந்துவிட்ட ஒரு தெருநாய் அதிர்ச்சியடைந்து மீண்டும் வந்தவழியே ஊருக்குள் திரும்பி
ஓட ஆரம்பித்தது.
தனது எல்லையில் அந்நியன் ஒருவன் ஊடுருவியதை அறிந்துகொண்டு
அதன் பின் ஓடிய கருப்பு, ஒருவேளை நேத்து பேஞ்ச மழையில
வாடை போயிடுச்சோ என்று தான் வேப்ப மரத்தின் பட்டைமீது இட்டிருந்த அடையாளத்தை
முகர்ந்து பார்த்தது. இன்னும் வடை அடிச்சிக்கிட்டுதான இருக்கு. டேய் சொரியா ஒனக்கு திமிரு ஜாஸ்தியாடுச்சி இந்த வாடையை பாத்தும்
என்னோட எல்லையில கால்வெக்க தைரியம் வந்துச்சா ஒனக்கு? என்று
வெறிகொண்டு தொடர்ந்து ஓடி ஊர்நாய் சென்ற திக்கை நோக்கி குரைத்தது. தன்னுடைய குரைப்பு சப்தம் நிச்சயம் அந்த சொரியனுக்கு
ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று
நம்பிக்கையுடன் வியர்த்து அடங்கி, அங்கேயே மண்ணைப் பறித்து
தனது ஆசனத்தை உருவாக்கிக் கொண்டு சுருண்டு படுத்துக்கொண்டது. அதான் போனவாட்டி
கழுத்தக் கடிச்சி மெரட்டினப்பவே சொன்னேனே இந்தப்பக்கம் வராதே கெளக்கால அந்த கெணத்துக்கு அந்தாண்டதான் ஒன்னோட
ஏரியான்னு. அடுத்தவாட்டி இந்தப்பக்கம்
வந்தேன்னா ஒன்னோட காதக் கடிச்சி துப்புறேன் பாரு என்று மனதுக்குள் கருவிக்கொண்டது.
பொழுது இருட்டிக்கொண்டு வரத் துவங்கியது.
தலைவர் கட்டளை பிறப்பிக்க ஆரம்பித்தார். எல்லாம் எடுத்து வைங்கடா. வேட்டைக்கு
ரெடியாகணுமில்ல. போங்கடா போயி அவனவன்
கொண்டுவரவேண்டியத எடுத்து பேக்பேக்குல
போட்டு எடுத்துட்டு வாங்கடா.
ஆட்டத்தில் தோற்றதால் குண்டுமுத்து டீ வாங்கிவருவதற்கு
ஊருக்குள் ஓடினான்.
சொங்காணி நீ போயி கொழம்பு எடுத்துட்டுவா பச்ச ஓடிபோயி
ஒன்னோட சோத்துமூட்டைய எடுத்துட்டுவா.
எல்லாரும் வந்தோடனே வேட்டைக்கு கெளம்பிடவேண்டியதுதான்.
டேய் காத்து தெக்கயிருந்து வடக்கால வீசுதுடா. அதுனால இந்த
வாட்டி வடக்கு பக்கமா போகலாம்.
பச்சை குண்டுவின் காதில் கிசுகிசுத்தான். ஏண்டா காத்துக்கு
எதுத்தாப்புல போகணும்?
அப்பத்தான் நம்மளோட வாடை, நடக்குற
சத்தம் எல்லாம் எதுத்தாப்புல
இருக்குற விலங்குகளுக்கு போயி சேராதுடா. இதெல்லாந்தான் வேட்டையோட அடிப்படை பாடம்
புரிஞ்சுக்க.
ஓ அப்புடியா நல்லது மாமா என்ற பச்சையிடம். பெரிய ரகசியத்தைக் கற்றுக்கொடுத்த
பெருமிதத்தில் அவனை நோக்கி புன்னகையை உதிர்த்தான் குண்டுமுத்து.
குழு காட்டுப்பூச்சியை முன்னிருத்தி சீமைக் கருவேல மரங்கள்
சூழ்ந்திருந்த அந்த ஒற்றையடிப்பாதையில் வரிசையாக அணிவகுத்து நின்றுகொண்டது. தலைவரின் கண்கள் வேறு எதையாயோ துழாவ, அதை அறிந்துகொண்டு பின்னால் நின்றிருந்த
கருப்பு காட்டுப்பூச்சியின் முன்னால் சென்று மெதுவாக நடக்கத் துவங்கியது.
ஊரை ஒட்டி இருந்த சீமை கருவேல மரங்களும், வயல் வரப்புகளும்
மறைந்து அடர்ந்த புதர் காட்டுக்குள் வந்து
சேர்ந்தது குழு. எங்கும் காரை புதர்களும் காற்றாழை புதர்களும் எழுந்து நிற்க, மரம் வெட்டியவர்கள் கருணைகொண்டு விட்டுச் சென்ற மரங்கள் வளர்ந்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக பெரிய
மரங்களாக நின்றிருந்தன.
எதிரே புதரில் சலசலப்பு தெரிய கருப்பு ஓடிச்சென்று
என்னவென்று அறிய முயற்சி செய்தது.
சட்டென்று புதரிலிருந்து இரண்டு பெரிய கொம்புகளுடன் ஒரு
பெரிய தலை வெளிப்பட்டு நின்றதைக்கண்ட மொத்த கூட்டமும் வியர்த்து வெலவெலத்து
அதிர்ச்சியில் உறைந்து பாறை போல நின்றுவிட்டது.
டேய் யாரும் அசையாதீங்கடா, அது வந்து முட்டிச்சுன்னா ஆட்டம் குளோஸ்
ஆயிடும். சத்தம் காட்டாம பயப்படாம, அப்பிடியே டார்ச்ச எடுத்து அதோட கண்ணுல அடிங்கடா.
உத்தரவை புரிந்துகொண்டு சுடலை தனது டார்ச் லைட்டை எடுத்து
அந்த காட்டெருமையின் முகத்தில் வீச. வைரம் போல அதன் கண்கள் ஒளிர்ந்தது. எருமை ஆபத்து என்று அதிர்ந்து தலையை
குனிந்துகொண்டு ஒளிவந்த திக்கிற்கு எதிர் திசையில் திரும்பி வேகமாக நகர ஆரம்பித்தது.
பஞ்சரான டயரில் வெளிவருவது போல வெளிவந்த அனைவரின்
பெருமூச்சும் காட்டின் அமைதியைத் துளைத்துக்கொண்டு சென்று காற்றில் கலந்து
மறைந்தது.
பச்சையின் மனதில் திகில் வந்து சூழ்ந்துகொண்டது.
எதிர்ப்படும் ஒவ்வொரு சிறிய சப்தமும் அவனது இதயத்துடிப்பை அதிகரித்து, அதன் சப்தம் டம் டம் என்று
மேளமடிப்பதுபோலக் காதில் வந்து உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் சப்தத்தில்
குழு உரையாடுவது மெலிதாகவே காதில் வந்து விழுந்தது.
நல்ல வேளைடா, அது நம்மள ஒண்ணும் செய்யல, அதுதாண்டா நம்ம சாமியோட மகிமை ஏத்தினி தரம் இப்பிடி பாத்துருக்கோம்.
அதான், நம்ம தலைவருக்குள்ள சுடலைக்கருப்பு எப்பவுமே இருக்குல்ல அதப்பாத்து
அப்பிடியே அப்பீட்டு ஆயிடுச்சி அந்த காட்டெருமை.
உரையாடலை கிரகித்துக்கொண்ட கட்டுப்பூச்சி மனதில்
சந்தோசத்துடன், இந்த நம்பிக்கைதாண்டா ஒங்க கிட்ட
எனக்கு ரொம்பப் புடிச்சது என்று பாராட்டிக்கொண்டே, புன்னகைத்துக்
கொண்டான். குழுவில் சிறு சந்தேகம் வந்தால்கூட தலைமைக்கு ஆபத்தல்லவா. அதனால் இந்த
நற்சான்றுகள் இருக்கும்வரையும் தலைமை பதவியும் அதையொட்டியுள்ள சலுகைகளும் தடையில்லாமல்
கிடைக்குமல்லவா. கட்டுப்பூச்சியின் நுரையீரல் பெரிய சுவாசத்தை வெளிப்படுத்தி தன்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
எருமை என்னடா பெரிய எருமை டேய் சொம்பு, ஒருவாட்டி சிறுத்தையே
இப்பிடி எதுத்தால வந்துருச்சி தெரியுமா? நாங்க அதுக்கிட்ட மாட்டிக்கிட்டோமா, இல்ல அது நம்மகிட்ட மாட்டிக்கிடுச்சானு தெரியல, ஆனா, குரூப்புல வந்துருந்தவனுங்க எல்லா பயலுகளும்,
அப்பிடியே ஒண்ணுக்கு போயிட்டானுங்க.
தலைவரு மட்டுந்தான் தெகிரியமா நின்னுட்டு இருந்தாரு. நாங்களும் அப்பிடியே செல மாதிரி
நின்னுட்டோம். அதோட கண்ணு அப்பிடியே வைரம்
மாதிரி சொலிச்சதுடா, இன்னும் எனக்கு கண்ணுமுன்னாடி வந்து
நிக்குது அந்த காட்சி.
காட்டுப்பூச்சியின் மனம் புலம்பியது நான் எங்கேடா
அடக்கிவெச்சேன், அதுக்கு கொஞ்சநேரத்து முன்னாலதாண்டா நான் டேங்க காலிபண்ணிட்டு வந்து நின்னேன், அதுனால
எனக்கு அப்ப ஒண்ணுக்கு வரலடா. நீங்கள்ளாம்
ரொம்ப நல்லவங்கடா எம்மேல ரொம்ப அன்பு காட்டி விசுவாசமா இருக்குறீங்க. நல்லா
இருபீங்கடா. என்று கண்ணீர் வராத குறையாக காட்டுபூச்சியின் மனம் குழுவை
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது.
சொடல மெதுவா பேசுடா, அது எங்கினாச்சும் இருந்துட்டு இப்ப எதுத்தால வந்து நின்னுடப் போகுது.
கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் உடலும் அனிச்சையாக அதிர்ந்து
அடங்கியது. தலை சில்லிட்டுக்கொண்டு, உடல் சிலிர்த்து, முடிகள் குத்திட்டு நின்றன.
அனைவரின் கண்களிலும் மிரட்சி தொனிக்கத்
துவங்கியது. எதுவும் வந்துவிடுமோ வந்தால் என்னசெய்வது என்று. மூளை வேகமாக வேலைசெய்து தப்பிப்பதற்கு என்ன
வழிகள் ஈர்க்கின்றது என்று தேடத் துவங்கியது.
டேய் பயமுறுத்தாத வாங்கடா. ஏற்கனவே கையி காலு எல்லாம் ஆடிக்கிட்டு
இருக்கு. இப்பத்தான் எரும வந்து
மெரட்டிட்டு போயிருக்கு. புலி, சிறுத்தை, கரடி எல்லாம் கண்ணுல
தட்டுப்படக்கூடாதுன்னு நல்லா சாமிய வேண்டிக்கோங்கடா.
பச்சை குண்டுவின் காதில் கிசுகிசுத்தான் அப்ப இதெல்லாம்
இல்லேன்னா என்னடா மானும் பண்ணியும் புடிப்பீங்களாடா?
மீண்டும் பச்சையை
விழிகளால் முறைத்துக்கொண்டே பேசாமவாட என்று முன்சென்றான் குண்டு.
சற்று தூரம் சென்றவுடன் தரையில் ஏதோவொன்று ஓடிச் சென்று
அருகிலிருந்த புதரில் சென்று மறைந்தது. கருப்பு
அதை கண்டுகொண்டு அந்த புதரை அடையாளப்படுத்திக்கொண்டு அதன் முன்னால் சென்று
நின்றது.
அனைவரின் கைகளிலும் இருந்த டார்ச் மேலும் கீழும்
சுழன்றுவிட்டு புதரை மையமாகக் கொண்டு அதன் ஒளிக்கதிர்கள் வந்து ஒன்று சேர்ந்தன. என்னடா அது? அதுதாண்டா. நல்லா பாத்தியா ஆமாந் தலைவரே
அதேதான். அப்ப வேட்டை சாமான் எல்லாம் ஏறக்கிவைங்கடா. இங்கே நமக்கு வேட்டை துவங்கிடுச்சி.
டேய் சொங்காணி சொடலமுத்து நீங்க ரெண்டுபெரும் அப்பிடியே பொதருக்கு
பின்னாடிபோயி வளைச்சிக்கிட்டு வாங்கடா. அது இந்தப் பொதருல தான போனது.
கருப்பு நாங்க முன்னாடி பாத்துக்கிறோம், நீ சோத்தாங்கையி பக்கம்
போயி அத வளைச்சிக்கிட்டு வா என்று காட்டுப்பூச்சி உத்தரவிட,
இனம் மொழியைக் கடந்து தனது எஜமானனின் உத்தரவைப்
புரிந்துகொண்ட அந்தத் தெருநாய், தான் உண்ட அந்த ஒரு லெக்பீசு எலும்புக்காக
விசுவாசத்துடன், கருவேல மரத்தை சுற்றிக்கொண்டு அங்கிருந்த புதரின்
மறுபக்கம் சென்றது.
பாருங்கடா அதுபோற அழகை.
குரூப்புல எவனாவது இப்பிடி விசுவாசமா இருக்குறீங்களாடா?
பிறைநிலவு சிந்திக்கொண்டிருந்த சிறிய வெளிச்சத்தில் அனைவரின்
கைகளிலும் சிறிதும் பெரிதுமாக மின்னிய அந்த லாந்தர் மின்விளக்கு வட்டங்கள் அந்த
புதரின் மூலை முடுக்குஎங்கும் தேடித்திரிந்துவிட்டு இறுதியில் ஒரு பொந்தை நோக்கிக்
குவிந்து நின்றன.
டேய் பங்காளி இங்கதாண்டா இருக்கு, அந்த பொடவுல நொழஞ்சிதான்
போயிருக்கும். புதரை சுற்றிக்கொண்டு சென்ற கருப்பு, எதிரே
அந்த பொடவின் கற்களின் மீது மோப்பம் பிடித்துக்கொண்டு வந்து நின்றது. லாந்தர்
கைவிளக்குகளின் வெளிச்சத்தில் அதன் கண்கள் வைரக்கல் போல மின்னியது. வெளிச்சத்தைக் நேரடியாக கண்ட கண்களை சரிசெய்ய
இருட்டை நோக்கி அது முகத்தைத் திரும்பிக்கொண்டது. பலகாலம் இந்த கூட்டத்துடன்
சேர்ந்து பயணித்து கருப்புக்கு பழக்கபட்ட ஒன்றாகிவிட்டது. டார்ச் ஒளியை நேரே
தரிசித்துவிட்டதால், இருட்டில் நீலம் பச்சை புளு நிறங்கள்
கலந்த ஒரு நிறத்தொகுப்பு கண்களின் முன்னின்று ஆடிக்கொண்டிருக்க, எதிரில் உருவங்கள் எதுவும் தெரியாதது கண்டு சற்று பின்வாங்கி மீண்டும்
புதருக்கு வெளியே சென்றது.
டேய்! டார்ச்ச கருப்புக்கு நேரா அடிக்காதீங்கடா, தரையில அடிங்கடா. அதப்
பாரு மறுபடியும் பொதருக்கு வெளியே போயிடுச்சி இனி அஞ்சு நிமிஷம் கழிச்சிதான்
வரும். கருப்பு இல்லாம நாம அதப் புடிக்க
முடியாது. சரி பங்காளி நீ கருப்பு நிக்கிற பக்கமா போயி அங்க எதிர் சைடு ஒரு குழிய வெட்டு. இங்க நாங்க அந்த பொடவுல ஆறு இஞ்சி பிளாஸ்டிக்கு பைப்பா
சொறுகிட்டு அதசுத்தி சல்லாக்குகோணி வலைய புடிச்சிக்குறோம். பங்காளி அந்தப்பக்கமா போயி குழிய நோண்டு. டேய்
பச்சமல சோத்துமூட்ட நீயெல்லாம் எதுக்குடா எங்கக்கூட வந்து சேந்தே. அந்த
புரசங்குசிய வெச்சி பங்களியோட போயி அந்தப்பக்கமா ஒரு சின்ன குழிய வெட்டுடா.
அப்பத்தாண்டா அது குழியிலருந்து
பயந்துக்கிட்டு இந்தப்பக்கமா வெளியே வருண்டா.
பச்சைமலை சில
காலம் இந்த கடுமையான வசனங்களை கடந்து
சென்றுதான் விட்டுதெரியாமல் குரூப்பில் ஐக்கியமாக
முடியும். இந்த வசனங்கள் எல்லாம் அவனது
கர்வத்தைப் பொடித்து தலைவரிடம் பணிவை ஏற்படுத்தும். பணிவு வரவில்லை என்றால் குழு
அவனை ஏதாவது குற்றம் கூறி ஒதுக்கிவிடும்.
ஆனால், சோமபானம் இஸ்பான்சர் செய்பவர்களுக்கு
நெறிமுறைகள் தளர்த்தப்படு நீ அப்பிடி எல்லாம் இருக்காதடா என்ற ஆறுதல்
வார்த்தைகளுடன் குழு அவனை உரிமையுடன் உள்ளே தொடர்ந்து வைத்துக்கொள்ளும்.
மாமா பாம்பு எதுவும் வந்துராதுல்ல.
டேய் சோத்துமூட்ட பாம்ப முன்னபின்னே பாத்துருக்குறியா அது
இருக்குற பொந்து, இதுமாதிரியாட இருக்கும் புண்ணாக்கு.
போடா போயி சொன்னத செய்யி. அடுத்த வாட்டி
எங்களோட வராத, வொன்னோட அப்பத்தாக்கிட
சொல்லிடறேன், இவன் எங்களோட வேட்டைக்கி வந்தான்னு.
கோச்சுக்காத மாமா அப்பத்தாகிட்ட சொல்லிடாத நாம் போயி குழிய
நோண்டுறேன்.
ஏதாவது சாதித்துக் காட்டணும். இல்லேன்னா அடுத்தவாட்டி இவர்களுடன்
வேட்டைக்கு வரமுடியாது. பச்சமலை கையிலிருந்த நீண்ட புரசன் கொம்பை
எடுத்துக்கொண்டு வீரமாகத் தவ்விக்கொண்டு புதரைச் சுற்றிக்கொண்டு அதன் மறுபக்கம்
சென்றான். டார்ச் வெளிச்சத்தின் தாக்குதலிலிருந்து விடுபடாமல் விழித்துக்கொண்டு
கருப்பு அங்கே நின்றிருந்தது. உடன் சொங்காணியும் சுடலைமுத்துவும் நின்றிருந்தனர். பச்சை வந்தவுடன் சுடலை மறுபக்கம் சென்று தலைவருடன்
இணைந்துகொண்டான்.
மாமா எங்கே தோண்டுறது சொல்லு? பச்ச அந்த கம்ப வச்சி அப்பிடியே தரையில
தட்டிக்கிட்டே வா, கீழே பொந்து இருந்தா சத்தம் டொப்பு
டொப்புன்னு கேக்கும். போந்து ஆழமா இருந்தா
கேக்காது அதுனால எல்லாம் அனுபவந்தான்.
ரெண்டு மூணு வேட்டைக்கு பொறவு
வொனக்கு எல்லாம் தானா தெரிஞ்சிடும். இப்ப அந்த பொந்துக்கு நேரா அஞ்சடி
தள்ளி மண்ணு இருக்கமா இருக்குற பக்கம் பாத்து குழிய நோண்டு,
பச்சையின் கையில் இருந்த கழி விருவிருவென்று மண்ணில் இறங்கி குழியை தூர்க்க
ஆரம்பித்தது.
உடன் நின்றிருந்த செந்தூற்பாண்டி குழியின் மறுபுறமிருந்த
தலைவரைபார்த்து கத்தினான். எய் பங்காளி! குழி நோண்ட ஆரம்பிச்சிட்டோம். பொந்துல பைப்பா வெச்சிட்டு, அதுல வலைய சுத்திட்டு வெளிப்பக்கமா விரிச்சிப் புடிச்சிக்கோங்க
எல்லாம் அங்கிட்டு தான் ஓடியாரும்.
டேய் மாடசாமி
குண்டுமுத்து ரெண்டுபேரும் பொந்துல வலைய கவுத்து அழுத்தி
பிடிச்சிக்கோங்கடா. எதுன்னாச்சும்
தப்பிச்சி ஓடிச்சுன்னா கருப்பு பாத்துக்குடும். காட்டுப் பூச்சி கூறி வாயி மூடுவதற்குள், சரசரவென்று சிறிதும்
பெரிதுமான ஐந்து எலிகள் வெளிவந்து வலையில் சிக்கிக் கொண்டன.
மாடசாமிதனது கைபிடியில் இருந்த வலையின் ஒரு பகுதியை
குண்டுமுத்துவிடம் கொடுக்க. இருபக்கத்தையும் இணைத்துக்கொண்டு அருகிலிருந்த
பாறையில் சொத் சொத் என்று நான்குமுறை அடித்துத் துவைத்தான். அதனுள்ளிருந்த ஐந்து
எலிகளும் ரத்தம் கக்காமல் உள்காயம் பட்டு இறந்து விழுந்தன.
சரிடா அதயெல்லாம் அந்த பிளாஸ்டிக் பேக்குல போடுங்க. கருப்பு ஓடியா, அடுத்த பொந்துக்கு கூட்டிட்டு போ.
பச்சைக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது. குண்டுவை
நெருங்கினான். என்ன மாமா இது நீங்க என்னவோ
மானு,
காட்டுப்பன்னி, மொசலுன்னு
வேட்டையாடுவீங்கன்னு பாத்தா. எலிபுடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இதப்புடிக்கிறதுக்கு எதுக்கு பண்ணிபுடிக்கிற கண்ணிகொம்பு.
அந்த இருட்டான சூழலிலும் குண்டுவின் கண்கள் முறைத்துப்
பார்ப்பதை பச்சையால் உணர முடிந்தது.
குண்டு சற்று
சமாளித்துக்கொண்டே கெடைக்கும் மாப்ள, எப்பனாச்சும் மான்கூட
கெடெச்சிருக்கு. காட்டுப்பண்ணியும்
கெடெச்சிருக்கு. ஆனா, இப்பல்லாம் எதுவும் கண்ணுல தட்டுப்படுறதில்ல. அதுனால கொஞ்சம் பொறுமையா
இரு. இப்பத்தான வந்துருக்க.
கட்டுப்பூச்சி கருப்பை அழைத்து வசைபாடிக் கொண்டிருந்தான்.
இங்க வா கருப்பு. நீ ஏத்தினி தரம் எங்களோட வேட்டைக்கு வந்திருக்க? எங்கள விட ஒனக்குதான்
எங்கே பெரிய ஐட்டமா இருக்குனு தெரியும். நல்ல பெரிய பெருச்சாளி இருக்குற பொந்தா பாத்து
கூப்புட்டுட்டு போவியா இத்துனூண்டு
குஞ்சுமாதிரி இருக்குற எலிக்கெல்லாம் மண்ணவாரி
தெளிச்சிக்கிட்டு, எங்கள கபடியாட வைக்கிறே. இனிக்கு ஒன்னோட பங்கு இதோட வாலுதான்.
மச்சான் நீ யாரோட குஞ்ச சொல்லுற என்ற சுடலையுடன் அனைவரும் இணைந்துகொண்டு ஒரு சிரிப்பு சிரித்து
முடித்தனர். அமைதியான காட்டில் அந்த சிரிப்பலை
ஊடுருவி அதன் அமைதியை குலைத்து ஓய்ந்தது.
அதான் மச்சான் ஒன் தம்பியோடதுதான். ஓக்காளி இவன்லாம் கல்யாணம் பண்ணி என்ன செய்யப்போறான்.
அவர்கள் தன்னைத்தான் சொல்கின்றார்கள் என்று அறியாது
பச்சமலையும் உடன் சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான்.
கருப்புக்கு தெரிந்துவிட்டது தனது பங்குக்கு இந்தமுறை
எதுவும் தேராது என்று. தலையை
குனிந்துகொண்டே அடுத்த குழியை தேடிக்கொண்டு செல்லத்துவங்கியது.
டேய் நம்ம கருப்புக்கு ரோஷம் வந்துருச்சி, அடுத்த புடி நல்ல
புடியா இருக்கும்டா. வேட்டைத் தளவாடங்கள் தோளில் ஏறிக்கொள்ள டார்ச் வெளிச்சத்தை
கருப்பு சென்று கொண்டிருக்கும் பாதையில் அடித்துக் கொண்டே அனைவரும் அதை பின் தொடரத் துவங்கினர்.
பச்சையின் கனவுகள் பொடிந்துபோய், அவன் மனம் தவித்துக்
கொண்டிருப்பதை அங்கே யாரும் அறியவில்லை. வேட்டை பற்றிய பெரிய கனவுகளுடன் செலவு
செய்து கூட்டத்துடன் இணைந்துவிட்டு, கடைசியில் எலிப்பிடிக்க
வந்திருப்பதை அறிந்து மனம் தாளாமல் பொங்கிக் கொண்டிருந்தது.
டேய் குண்டு இவ்ளோ நாளா இதத்தானாட வேட்டைனு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க. ஊருல கூட
நீங்கள்ளாம் பெரிய வேட்டைக்காரங்கன்னு
மரியாதை வெச்சிருக்காங்கடா.
டேய் பச்சை வாய மூடிக்கிடு வா, தலைவரு காதுல
வுழுந்துடப்போகுது.
வரப்பு போன்ற மண்மேட்டின் அருகில் இருந்த பொந்தின் முன்னால் சென்று நின்றது
கருப்பு. அதன்மேலே சதுரக்கள்ளி காற்றாலை
பெரிதாக வளர்ந்து நின்றிருக்க, டேய் எல்லாரும் முள்ளு பாத்து கைய
கால வேசிட்டு வாங்கடா என்று அக்கறையான உத்தரவு காட்டுப்பூச்சியிடமிருந்து பிறந்து காற்றுடன்
கலந்து மறைந்தது.
காட்டுப்பூச்சி கருப்பை பார்த்தான். என்ன கருப்பு இங்கே
நல்ல விருந்து இருக்கா என்று தலைவர் கேட்க அவரது முகத்தை பார்த்து ஒரு
நம்பிக்கையான பார்வையை வீசிவிட்டு தனது நாக்கை தொங்கவிட்டுக்கொண்டது கருப்பு. கவலைப்படாத ஒனக்கு ஒரு பீசு கட்டாயம்
குடுப்பேன்.
மீண்டும் மீண்டும்
இரண்டு மூன்று குழிகள் அடையாளம் காணப்பட்டு சூறையாடப்பட சிறிதும் பெரிதுமாக இருபது எலிகள் பிளாஸ்டிக்
பைக்குள் வந்து சேர்ந்தது. மற்றொருபுறம்
எலிபிடித்து முடிந்தவுடன் வளைகளை மண்வெட்டிக்கொண்டு தோண்டி அதிருந்த நான்கைந்துபடி அளவு நெல்மணிகள் வேறு
ஒரு சவுளிக்கடை துணிப்பையில் சென்று சேர்ந்து
தலைவரின் முகத்தில் திருப்தியைக் கண்ட வேடைக்குழு இனி
காட்டிலிருந்து கிராமத்திற்கு திரும்பவேண்டியதுதான் என்று முடிவுக்குவந்து வேட்டை
தளவாடங்களை சுமந்துகொண்டு அவரது உத்தரவிற்காக
காத்திருந்தது.
காட்டுப்பூச்சி
குழுவின் உணர்வுகளை அறிந்துகொண்டவனாக, சரி வாங்கடா திரும்பிப் போகலாம்.
ஒரு மொசலுக்கூட கண்ணுல தட்டுப்படலயே.
இனிக்கும் நமக்கு சாமி படியளந்தது இதுதான் போலருக்கு. வாங்க போகலாம்.
இரவு நாடு
நிசியைத் தொட்டுக்கொண்டிருந்ததால் களைப்பும் பசியும் மேலிட அனைவரின் கால்களும்
கிராமத்தை நோக்கி திரும்பி நடக்கத்துவாங்கின.
கிராமம்
நெருங்கியது. நான்கு பாறைகளுக்கு நடுவே இருந்த சிறிய சமவெளி ஒன்றில் ஏற்கனவே
பலமுறை சுள்ளிகள் குவித்து தீ மூடப்பட்ட அடையாளம் தெரிந்தது. பச்சை அயற்சியில் ஒரு
பாறை மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
ஏண்டா சொங்கி
அதுக்குள்ள என்னடா ஒனக்கு அசந்துபோயிடுச்சி. போயி சுள்ளி பொறுக்கிட்டுவாடா, இன்னும் நெறைய வேலை
இருக்குடா. இந்தா டார்ச்சு. ஏற்கனவே கட்டுக்குள்ளிருந்து வரும்போதே அனைவரும்
தமது கைக்கு கிடைத்த காய்ந்த சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டே வந்ததால் வேள்வி பூசையை துவக்குவதற்கு தேவையான
சுள்ளிகள் கைவசம் வந்திருந்தது.
சுடலை தனது மடியில் முடிந்திருந்த நெருப்புப் பெட்டியை
எடுத்து சுள்ளிகளை அடுக்கு நெருப்பை பற்றவைத்தான்.
ஏண்டா பச்ச என்ன ஜெயில்ல போயி களி துன்னச் சொல்றயா.
பாரஸ்டு காரனுங்க மொயல புடிச்சாக்கூட நம்மக் கொட்டைய புடுச்சி நசுக்கிடரானுங்க. சாமிதோப்புல
ஆலமரத்துக்கு கீழ, ஒரு சோசியக்காரன் பச்சக் கிளிய பொட்டிக்குள்ளாற
வெச்சி பொழப்பு நடத்திக்கிட்டு இருந்தான். என்னவோ, அந்தக்
கிளியெல்லாம் அரிய வகை வெலங்குன்னு சொல்லி பரஸ்ட்டுக் காரனுங்க அவனப் புடிச்சிட்டு
போயிட்டாங்க. அவுங்க கைல கால்ல வுழுந்து கேசு இல்லாம தப்பிச்சி வந்துருக்கான்.
இப்ப மம்புட்டிய தூக்கிக்கிடு தண்ணிபாச்ச போயிட்டு இருக்கான். மண்ணோட மவுசு இப்பதான் தெரியுது மாப்ள அவனுக்கு.
ஏண்டா சொங்காணி அரசாங்கம் நம்மளோட தெறமைய இப்புடி நசுக்குனாங்கன்னா
பொறவு புலிவேட்டைக்காடா போகமுடியும்.
ஏதோ இந்த வெவசாயிங்களுக்கு புண்ணியமா போகட்டுமுன்னு இந்த
காட்டு எலிங்கள புடிச்சி துன்னுகிட்டு இருக்கோம்.
கசுமாலம் திங்கிற பண்ணியக்கூட
வெட்டி சாப்புடுரானுங்க, ஒனக்கு நெல்லு தின்கிற எலிய சாப்புடுறதுக்கு என்னடா நோகுது. டேய்
பச்சை இது ஒரு சாம்பிள் தாண்டா இன்னும்
பெரிய பெரிய வேட்டைஎல்லாம் தலைவரு செஞ்சிருக்கருடா. ஆனா, இப்ப
இந்த பரஸ்ட்டுக் காரங்க தொல்ல தாங்கமுடியலடா, அதுனாலதான் இப்பிடி கீழே ஏறங்கிட்டோம். எங்க ரத்தத்துலயே ஊறிப்போன வேட்டைய
மறக்கமுடியுமா சொல்லு.
எலியின்
தொடைப்பகுதியை கடித்துக்கொண்டே தலைவரே.
இந்த செட்டு எலிங்க அந்த கருவாயன் தோட்டத்துல போயிதான் தீனி துன்னுட்டு வருதுங்க போலருக்கு. பாருங்க உப்புக் கரிக்குது. ஒவரு மண்ணுல நெல்லு
போட்டு வெவசாயம் பண்ணுற ஒரே ஆளு அவந்தானே.
அவனோட தோட்டந்தானே இங்கே காட்ட ஒட்டி பக்கத்துல இருக்குது. அடுத்தவாட்டி வேறபக்கம்
போகணும் தலைவரே.
‘ம் ம்’ சரிடா சொடலமுத்து என்று கூறிக்கொண்டே தலையை
வெட்டி, குடல்குந்தாணி,வால் நீக்கி குச்சியில்
குத்தி சுடப்பட்ட ஒரு எலியை எடுத்து ஆப்பாயில் சாப்பிடுவதுபோல அப்படியே வாய்க்குள்
திணித்துக்கொண்டு மெல்ல ஆரம்பித்தான் காட்டுப்பூச்சி.
No comments:
Post a Comment